Take a fresh look at your lifestyle.

டாஸ்மாக் குடோனில் அதிகார மோதல் – தாசில்தாரை விரட்டியதாக மேலாளர் மீது குற்றச்சாட்டு❗️

110

டாஸ்மாக் குடோனில் அதிகார மோதல் – தாசில்தாரை விரட்டியதாக மேலாளர் மீது குற்றச்சாட்டு❗️

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் குடோன் தொடர்பாக நிர்வாகத்தில் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த குடோன் மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு உட்பட்ட பல டாஸ்மாக் கடைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த குடோனில் மேலாளராக பணியாற்றி வரும் திரு. குமார் கடந்த நான்கு ஆண்டுகளாக அதே பதவியில் தொடர்ந்து பணியாற்றி வருவது அதிகாரிகள் மத்தியில் ஏற்கனவே விவாதத்தை ஏற்படுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு நிர்வாகம் அந்த இடத்திற்கு தாசில்தார் ஒருவரை பணியில் அமர்த்த முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அந்த அதிகாரி அங்கு பொறுப்பேற்க சென்றபோது எதிர்பாராத பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடோன் மேலாளர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த அதிகாரியை அங்கு பணியில் அமர விடாமல் தடுத்ததாகவும், அலுவலக அறையையே பூட்டிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தாசில்தார்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தகவல் தெரிவித்ததாகவும், அங்கு நடைபெறும் சூழ்நிலைகளை விளக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த குடோனில் பணியாற்றும் ஒரு பெண் மேலாளர் குறித்து சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் எம்பிஏ பட்டதாரி என்பதாலும், நிர்வாக ரீதியாக அந்த விவகாரத்தில் அவரால் எந்த விதத்திலும் உதவி செய்ய இயலாது என்பது அதிகாரிகள் மத்தியில் பேசப்படும் கருத்தாக உள்ளது.
இதேவேளை, குடோன் மேலாளர் குமார் அந்த இடத்தை விட்டு மாற்றம் பெற மறுப்பதற்கான காரணம் அந்த இடத்தில் உள்ள வருமான வாய்ப்புகள் தான் என சிலர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் (MD) குமாரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவருக்கு நிர்வாகத்தில் ஆதரவு இருப்பதாக அதிகாரிகள் மத்தியில் வெளிப்படையாக பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிகாரிகள் இடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தி, “குடுமி பிடி சண்டை” போல் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.