Take a fresh look at your lifestyle.

ஜனநாயகன் விமர்சனம்

2

ஜனநாயகன்

கே வி என் மீடியா தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய்யின் கடைசி படமாக வெளியாகி உள்ள ஜனநாயகன் படத்தின் விமர்சனம் இதோ.

ஒரு கொலை வழக்கில் சிறை தண்டனை கைதியாக இருக்கிறார் விஜய். அப்போது ஜெயிலில் நடக்கும் ஒரு கலவரத்தை அவர் கட்டுப்படுத்துகிறார். இதனால் ஜெயில் அதிகாரி கௌதம் மேனனுக்கு விஜய் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டு, அவருக்கு உதவி செய்கிறார். இந்நிலையில் ஒரு விபத்தில் கௌதம் மேனன் இறந்து போகிறார். அவரின் விருப்பப்படி அவரது மகள் மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்த்து விட பல பயிற்சிகளை அளித்து வருகிறார் விஜய். இன்னொரு புறம் ஆப்பிரிக்காவில் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தி, நாட்டையே சுடுகாடாக மாற்றிவிடும் பாபி தியோல் ஒரு பெரிய சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார்.

இந்த சூழலில் பாபி தியோல் விஷயத்தில் தெரியாமல் மாட்டிக்கொள்ளும் மமிதாவை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். அவரை காப்பாற்றுவதற்காக மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார் விஜய். அந்த இடத்தில் விஜயை பார்த்த பாபி தியோல் அதிர்கிறார். விஜய்யை பழி தீர்க்கத் துடிக்கிறார். அவர்கள் இருவருக்கும் உள்ள பகை என்ன? அவரின் சதி திட்டம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

படம் முழுவதும் முழு எனர்ஜியுடன் அதிரடி ஆக்ஷன் காட்டி நடித்துள்ளார் விஜய். அன்பு, பாசம், கோபம், சந்தோஷம், ஆக்ரோஷம் என அத்தனை பரிமாணங்களையும் அழகாக திரையில் காட்டி நடித்துள்ளார். காட்சிக்கு காட்சி இளமையாக தோன்றும் விஜய், ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கிறார். கடைசியாக ஒரு ஆட்டம் என கேட்டவுடன், செம ஸ்டெப் போட்டு தியேட்டரையே ஆட்டம் போட வைத்து விடுகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி உள்ளார்.

விஜய்க்கு அடுத்தபடியாக மிரட்டல் நடிப்பை கொடுத்துள்ளார் பாபி தியோல். அவருடைய கண்கள் மிகப்பெரிய காந்த சக்தியாக உள்ளன. பழைய வில்லத்தனம் குறையாமல் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். கதைக்கு மையப் புள்ளியாக நடித்துள்ள மமிதா பைஜுவின் நடிப்பு எக்ஸலண்ட். அவருக்கும் விஜய்க்குமான கெமிஸ்ட்ரி சூப்பர்.

விஜய் ஜோடியாக இல்லாவிட்டாலும் உடன் வரும் தோழியாக பூஜா ஹெக்டே அழகாய் நடித்துள்ளார். அம்மாவாக வரும் ரேவதி, போலீஸ் அதிகாரியாக வரும் கௌதம் மேனன், இன்ஸ்பெக்டராக வரும் நிழல்கள் ரவி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பிடித்த நடிகர், லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு தலைவன் என பல டாஸ்க்கள் இருந்தாலும்
அதை அனைத்தையும் எதிர்கொண்டு அனைத்து தரப்பினரும் கொண்டாடி ரசிக்கும் படியான ஒரு ஃபேர்வெல் படத்தை விஜய்க்கு கொடுத்துள்ளார் ஹெச். வினோத். பல காட்சிகள் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரியை நினைவு படுத்தினாலும் திரையில் அதை விஜய் பேலன்ஸ் செய்கிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் பரபரக்கிறது. மனோஜ் பரமஹம்சா மற்றும் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு படத்திற்கு பிரம்மாண்டம் சேர்த்துள்ளது.

மொத்ததில் ஜனநாயகன் ஜனங்களின் நாயகன் .