Take a fresh look at your lifestyle.

சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி பொங்க பேட்டி

99

இந்த படம் என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெருமை..

தாய் நாட்டுக்கு அமரன்: தாய் மொழிக்கு பராசக்தி

சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி பொங்க பேட்டி

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தனது திறமையால் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று பராசக்தி படத்தின் மூலம் 25 படங்களை நிறைவு செய்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தமிழகம் முழுவதும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு ஏற்பட்டதுடன் வசூலையும் குவித்து வருகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், பராசக்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கே:பராசக்தி’ உண்மைக் கதையா?

ப:இந்தி திணிப்புக்கு எதிரா போராட்டம் நடந்த காலகட்டத்துல நிகழ்ந்த ஒரு சில உண்மைச் சம்பவங்களை மையமா வச்சு உருவாக்கப்பட்ட கற்பனை கதைதான் படம். அண்ணன் – தம்பி, அவங்க வீட்டுக்கு எதிர்ல வசிக்கிற ஒரு பொண்ணு,எல்லோரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்றாங்க.அந்த போராட்டம், இவங்க வாழ்க்கையில என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துச்சு, என்ன நடந்ததுங்கறதுதான் கதை.

கே:இது ‘பீரியட்’ படம், உங்களை எப்படி தயார்படுத்தினீங்க?

ப:மொழிப்போர் நடந்த காலத்துல என்னென்ன பண்ணினாங்க. மாணவர்கள் எப்படி நடந்துக்கிட்டாங்க… அந்த மாதிரி விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். மொழி திணிப்புக்கு எதிராக, இவ்வளவு தீவிரமான போராட்டம் வேற எங்கயும் நடந்திருக்கான்னு தெரியல. இந்தப் படத்துக்காக ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம் எல்லாத்தையும் மாற்றினேன். அப்புறம் உடல் எடையை குறைச்சேன். அந்த காலகட்டத்து ஃபீல் படத்துல இருக்கும். அதுக்கு டீம் ரொம்ப உழைச்சிருக்காங்க.

கே:இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட ‘வேர்ல்டு ஆஃப் பராசக்தி’ உங்க ஐடியாவா?

ப:பொங்கல் ரிலீஸ் அப்படிங்கறதால, நம்ம பாரம்பரிய உடையணிஞ்சு,வள்ளுவர் கோட்டம் மாதிரி இடத்துல இந்தப் படம் பற்றிய விஷயங்களை கொண்டு போகலாம்னு ஆரம்பிச்சோம். அப்படியே பேசி பேசி, ஏன் ஒரு ‘எக்ஸிபிஷன்’ மாதிரி பண்ணக்கூடாதுன்னு அவங்க அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போனாங்க. அதுல இந்தப் படத்துக்காக பயன்படுத்தப்பட்ட கார், போன், அந்த காலகட்ட உடைகள், ரயில் எஞ்சின் அப்படின்னு எல்லா பொருளையும் கொண்டு போய் வச்சோம். அதுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. சென்னையை தொடர்ந்து திருச்சியிலேயும் கண்காட்சி வச்சிருக்கோம்.

கே: இதில் மாணவர் போராட்டத்துடன் அரசியல் பேசியதாக தெரிகிறதே?

ப:இந்தப் படம் மூலமா மாணவர்களோட பவர் என்னன்னு புரிஞ்சுக்க முடியும்.ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்ததை நாம் பார்த்தோம்ல. அதுக்கு சோஷியல் மீடியாவும் ஒரு காரணம். அந்த காலகட்டத்துல ஜெராக்ஸ் மிஷன் கூட கிடையாது. எல்லோரும் கைப்பட எழுதி, நோட்டீஸ் விநியோகிச்சிருக்காங்க. மொழிப் போருக்கு எதிராக எவ்வளவு தீவிரமா மாணவர்கள் இருந்திருக்காங்க,அப்படிங்க றதை இந்த தலைமுறைபுரிஞ்சிக்குவாங்கன்னு நம்பறேன். படத்துல அரசியலும் பேசப்பட்டுள்ளது.அது எந்தமாதிரி அரசியல்னு படம் பார்க்கும்போது தெரியும்.

கே:ஹீரோவா நடிச்சிட்டிருக்கிற ரவி மோகன், இதுல வில்லனா நடிச்சிருக்கார். இப்படி நீங்களும் வில்லன் வாய்ப்பு வந்தா பண்ணுவீங்களா?

ப:ரவி சார்,வில்லனா ஏன் இதுல நடிச்சார் அப்படிங்கறதை நீங்க படம் பார்த்தீங்கன்னா புரிஞ்சுப்பீங்க. அவரோட கேரக்டரை ஆரம்பத்துல இருந்து கடைசிவரை சரியா எழுதியிருக்காங்க. படத்துல அவருக்கு சமமான முக்கியத்துவம் இருக்கு. அப்படி இருந்தாதான் ஹீரோக்கள் அதை பண்றதுக்கு சம்மதிப்பாங்க. எனக்கு என்டர்டெயினரான வில்லன் கேரக்டர் பண்றதுன்னா பிடிக்கும். எஸ்.ஜே.சூர்யா சார்லாம் பண்றார்ல, ஆடியன்ஸுக்கு அவர் மேல கோபம் வராது, ரசிப்பாங்க. அப்படி வில்லன் கேரக்டர் வந்தா பண்ணலாம். ரஜினி சார்கிட்ட ஒரு முறை பேசிட்டிருக்கும் போது சொன்னார். வில்லனா பண்றதுதான் ஜாலியா இருக்கும். கதைப்படி, அவன் ஜாலியா எல்லாத்தையும் பண்ணிட்டு, கடைசியில செத்து போயிருவான். ஹீரோ கடைசி வரை கஷ்டப்பட்டுட்டே இருக்கணும்னு.

கே: சினிமாவுல 25 படங்களை கடந்துட்டிங்க, இதுவரை என்ன கத்துக்கிட்டீங்க? என்ன கத்துக்கணும்னு நினைக்கிறீங்க?

ப:நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு. இந்த 13, 14 வருஷத்துல நான் தேர்வு பண்ற படங்கள்ல இருந்து நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. பண்ற படங்களோட ஜானர் மாத்திக்கிட்டே இருக்கணும்னு தோணுது. அதுக்கு என்ன செய்யணுமோ, அதைக் கத்துக்கிட்டு வர்றேன். தனிப்பட்ட முறையில தயாரிப்பாளர்களை சரியா தேர்வு பண்ணணும்னு நினைக்கிறேன்.

கே: காமெடி படங்கள் நடிச்ச சிவா, சீரியஸான படங்கள் அல்ல நடிக்க காரணம்?

ப: காமெடி படங்கள் நடிப்பது பிடிக்கும் என்றாலும், சினிமாவில் நீடிக்க இது போன்ற படங்களிலும் நடிக்க வேண்டி உள்ளது. அமரன் படம் தாய் நாட்டுக்காக நடித்தது. பராசக்தி படம் தாய் மொழிக்காக நடித்தது. அடுத்ததாக ஜாலியான காமெடி படத்திலும் அடிக்க உள்ளேன்.

கே:அடுத்து நீங்கள் நடிக்கும் படம்?

ப:வெங்கட் பிரபு சார் இயக்குற சயின்ஸ் பிக் ஷன் ஃபேன்டஸி படத்துல நடிக்க உள்ளேன். அதுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் போயிட்டிருக்கு.இன்னும் கால்ஷீட் முடிவாகல.

பாக்ஸ்வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெருமை:
பராசக்தி படத்தில் நடித்தது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெருமை என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த படத்தில் வெற்றி விழா சென்னையில் நடந்தது இதில் கலந்துகொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் இவ்வாறு கூறினார்.
—-+++—-
ரஜினி படத்தில் நடிக்கிறேனா?
இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அவர் எழுதிய ஒரு கதை சூப்பர் ஸ்டார் ரஜினி சாரிடம் சொல்லி உள்ளார். அது மிகவும் பிடித்ததால் தற்போது கமல் சார் தயாரிப்பில் ரஜினி சார் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் நான் நடிக்கிறேனா என்பது இதுவரை தெரியவில்லை.
கே. விஜய் ஆனந்த்