Take a fresh look at your lifestyle.

கௌதம் மேனன் ஓப்பன் டாக்

132

25 ஆண்டுகளில், 20 ஸ்டைலிஷ் படங்களை கொடுத்த இயக்குனர்

மின்னலாய் தோன்றிய துருவ நட்சத்திரம்

கௌதம் மேனன் ஓப்பன் டாக்

தமிழ் சினிமாவில் காதல் படங்களை இவ்வளவு மென்மையாக சொல்ல முடியும் என்ற புதிய ட்ரெண்ட் செக்டரை உருவாக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் கௌதம் வாசுதேவ மேனன். 2001 ஆம் ஆண்டு மாதவன் ரீமாசென் நடிப்பில் வெளியான ‘மின்னலே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி
‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘என்னை அறிந்தால்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என அழகான ஸ்டைலிஷ் வெற்றி படங்களை கொடுத்த கௌதம் மேனன், திரை உலகில் தனது வெள்ளி விழா ஆண்டை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி சமீபத்தில் என்னோடு வா வீடு வரைக்கும் என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார். இது குறித்தும்,தனது திரைப்பயணம் குறித்தும் கௌதம் மேனன் தினமலருக்கு அளித்த பேட்டி வருமாறு,

கேள்வி: முதலில் இயக்குனர் கனவு எப்படி வந்தது?
பதில்: மணிரத்னத்தின் ‘நாயகன்’ படத்தை பார்த்த பிறகு டைரக்டர் ஆக ஆசைப்பட்டேன். நாமும் இதுபோன்ற படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.அப்படி வந்தது தான் இயக்குனர் ஆசை.

கேள்வி:முதல் பட அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: மின்னலே படம் எடுக்கும்போது நடிகர் மாதவனுக்கு அலைபாயுதே படம் மட்டும் அடையாளமாக இருந்தது. ரிலீசுக்கு முன்பு ஹாரிஸின் இசை படத்தை பற்றி பேச வைத்தது. வசீகரா பாடல் பட்டி தொட்டி எங்கும் மின்னலே படத்தை கொண்டு சேர்த்தது. இதனால் எனக்கு இயக்குனர் என்ற அடையாளம் கிடைத்தது.

கேள்வி: உங்கள் படத்தில் மட்டும் பாடல்கள் ஹிட்டாக அமைவது எப்படி?
பதில்: நான் எப்போதும் பாடல்களுக்கு முன்னுரிமை தருவேன். அதோடு எனது படங்களில் பாடல்களை கவிஞர் தாமரை எழுதுவார். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். இதுவரை நான் இயக்கிய 20 படங்களில் நடுநிசை நாய்கள் படத்தை தவிர மற்ற 19 படங்களில் 85 பாடல்கள். அத்தனை பாடல்களும் ஹிட். இதில் 45 பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்தது. மற்ற 40 பாடல்கள் ஏ ஆர் ரகுமான் மற்றும் இளையராஜா இருவரும் தந்தனர். ஒரு படத்திற்கு தர்புர்கர் சிவா இசையமைத்தார்.

கேள்வி: உங்கள் படத்தில் ஹீரோயின்கள் கேரக்டர் டிசைன் எப்படி செய்கிறீர்கள்?
பதில்: காக்க காக்க மாயா டீச்சர் முழுவதும் எனது அம்மாவை வைத்து உருவாக்கியது. வேட்டையாடு விளையாடு மாயா கேரக்டர் எனது தோழிக்கு நடந்தவை. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசி, நான் குடியிருந்த வீட்டில் மேலே இருந்த பெண். இப்படி வாழ்க்கையில் நான் பார்த்து ரசித்த கதாபாத்திரங்களையே என் படத்தில் கேரக்டர்களாக வடிவமைக்கிறேன்.

கேள்வி: இயக்குனர் டூ நடிகர், மாற்றத்திற்கு என்ன காரணம்?
பதில்:இன்னும் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவோ, சம்பளம் நிறைய வாங்கவேண்டும் என்பதற்காகவோ நான் நடிக்க வரவில்லை. முதலில் எனக்கு நடிப்பதில் உடன்பாடு இல்லை. என் மேனரிசத்தை பார்த்து டைரக்டர்கள் அழைத்ததால் தான் சில படங்களில் நடித்தேன். பிறகு சூழ்நிலை காரணமாக நடிகனாக மாறிவிட்டேன். அதோடு எனது தனிப்பட்ட பைனான்ஸ் பிரச்சினைகளால் நடிப்பு என்பது எனக்கு அவசியம் ஏற்பட்டது.
சூழ்நிலையால் நான் நடிகனாகிப் போனேன். மற்றபடி என் ஆசை இயக்கம் தான்.

கேள்வி: ஹீரோக்கள், மியூசிக் டைரக்டர் உடன் ரிலேஷன்ஷிப் எப்படி?
பதில்: நடிகர்கள் இசையமைப்பாளர்கள் என யாருடனும் எனக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை. அனைவருடனும் இணைந்து பணிபுரியவே ஆசை. ‘முதல் மரியாதை’ பாணியில் ஒரு கதை கமலுக்காக எழுதி வைத்துள்ளேன். அவரும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். விரைவில் நல்ல தகவல் வெளியாகும்.

கேள்வி: உங்கள் வெள்ளிவிழா ஆண்டை ஏன் சைலன்டாக கொண்டாடினீர்கள்?
பதில்: முதலில் எனக்கே பதில் கான்ஃபிடன்ஸ் இல்லை. திடீரென எனது இசை உலக நண்பர்களுடன் பேசினேன். அவர்கள் சொன்ன ஐடியாவால் என்னோடு வா வீடு வரைக்கும் இசை நிகழ்ச்சி ரொம்ப சிம்பிளாக நடந்தது. அதன் பிறகு எனக்கு இதை பெரிதாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. நிச்சயம் திரையுலகினர் அனைவரும் பங்கேற்கும் பிரம்மாண்ட விழா நடத்தும் திட்டம் உள்ளது.

கேள்வி: அடுத்த படம் எப்போது இயக்கப் போகிறீர்கள்?
பதில்: கதை ரெடி, ரொம்ப புதுசான லவ் சப்ஜெக்ட்டை எழுதியுள்ளேன். இதற்கு இளம் ஹீரோ தேவைப்படுகிறது ‌ தமிழில் யங் ஹீரோ யாரும் இப்போதைக்கு இல்லை என்பதால் புதுமுகங்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளேன். அந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கேள்வி:துருவ நட்சத்திரம் படம் எப்போது ரிலீஸ்?
பதில்: அந்தப் படம் முடங்கி போயிருப்பதால் கொஞ்சம் ‘அப்செட்’டில் இருந்தது உண்மை தான். அந்த படத்தின் மீதான நிதி சிக்கலை களையவே நடிக்கத் தொடங்கினேன். தற்போது நிதி சிக்கலும், சட்ட சிக்கலும் விலகிய நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

கேள்வி : நடிப்பு தொடருமா?
பதில்: நடிப்பு என்பது இனி மிக குறைவாகத்தான் இருக்கும். நான் கற்றுக்கொள்ள நினைக்கும் ஒரு சிலர் (உதாரணமாக வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள்) அழைத்தால் மட்டும் நடிப்பேன். மற்றபடி இனி வரிசையாக படங்களை இயக்க முடிவு செய்துள்ளேன். இந்த 25 ஆண்டு கால பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி என்றார்.
-கே விஜய் ஆனந்த்