அதர்ஸ் டைட்டில் ஏன்? இயக்குனர் பேட்டி
அறிமுக ஹீரோவை,கௌரி கிஷனுக்கு ஜோடியாகியது ஏன்: இயக்குனர் அபின் ஹரிஹரன் ஓப்பன் டாக்
ஐவிஎஃப் மோசடிகளை பேசும் அதர்ஸ்: மனம் திறக்கும் அபின் ஹரிஹரன்
செயற்கை கருத்தரிப்பு என்பது மருத்துவ உலகில் இன்று மிக முக்கியமானது என்பதை தாண்டி பணம் பார்க்கும் மணி மாஃபியாவாக வளர்ந்து வருகிறது. அதை மையமாக வைத்து மெடிக்கல் கிரைம் திரில்லர் படமான “அதர்ஸ் ” என்ற படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக அறிமுக நடிகர் ஆதித்ய மாதவன் நடித்த அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை இயக்குனர் அபின் ஹரிஹரன் பகிர்ந்து கொண்டார்.
கேள்வி: 3டிஅனிமேட்டர், திடீரென இயக்குனர் ஆனது எப்படி?
பதில்: எனக்குபிடிச்சது அனிமேஷன் தான், ஒரு சேனலில் 3டி அனிமேட்டராக வேலை செய்துட்டு இருந்தேன். பிறகு துபாயில் விளம்பர வீடியோக்களுக்கு எடிட்டர் ஆக வேலை செய்தேன். அங்கே புரோமோ எடிட்டிங், செய்ய ஆரம்பிச்சு என்னுடைய கேரியர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தது. மீண்டும் சென்னை வந்த பிறகு போட்டோகிராபியில் ஈடுபாடு அதிகமாக செலிபிரிட்டி போட்டோகிராபராக வேலை செய்தேன். ஒருநாள் விஜய் ஆண்டனி சார் என்னை கூப்பிட்டார், அவர்தான் என்னுடைய வேலைகளை பார்த்துட்டு ஏன் சினிமாவில் கால் பதிக்க கூடாது அப்படின்னு கேட்டார்.
அவர் கொடுத்த நம்பிக்கையில் என்னிடமிருந்த ஒரு கதையை வைத்து ஒரு பைலட் வீடியோ உருவாக்கினேன். மேலும் எனக்கு வரையத் தெரியும்,ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்கினேன். அதுதான் அதர்ஸ் படம். கிராண்ட் பிக்சர்ஸ் இந்த கதையை தயாரிக்கவும் முன் வந்தாங்க.
கேள்வி:ஆதர்ஸ் பற்றி சொல்லுங்கள்
பதில்: நகரத்தில் இருக்கும் ஒரு செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனை, அங்கே ஐவிஎஃப் சிகிச்சை செய்த குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பிரச்சினை வருகிறது. அது என்ன பிரச்சனை? ஏன் அந்த குழந்தைகளுக்கு மட்டும் வருது என்கிறது தான் கதை. இதை இன்வெஸ்டிகேட் செய்ய வருகிற நாயகன் அவரைச் சுற்றி நகரும் திரைக்கதை. இதுதான் “அதர்ஸ்” .
கேள்வி:செயற்கை கருத்தரிப்பு குறித்த விழிப்புணர்வு படத்தில் உண்டா?
பதில்:நிச்சயம் இருக்கு. ஒரு குறிப்பிட்ட மெடிக்கல் கிரைம் பிரச்னையை படத்தில் பேசி இருக்கோம். மேலும் அதர்ஸ் என்கிற தலைப்பு ஏன் என்கிற காரணமும் அந்தக் கிரைம் அடிப்படையில் வைத்தது தான். செயற்கை கருத்தரிப்பு குறித்து நிறைய படங்கள் இதற்கு முன்பு வந்திருக்கு. அதில் இருந்து இந்தப் படம் வித்யாசம் படும் என்கிற நம்பிக்கை எல்லாம் நான் கொடுக்க மாட்டேன்.
கேள்வி: ஹீரோ ஹீரோயின் பற்றி சொல்லுங்க…
பதில்: எனக்கு கதை மேல நிறைய நம்பிக்கை இருந்தது. அதனால் ஸ்கிரிப்ட்டில் நடிகருக்காக எந்த மாற்றமும் செய்ய விருப்பமில்லை. எனவே புது முகம்தான் தேவைப்பட்டார். அந்த சமயத்தில் தான் எனக்கு ஆதித்யா மாதவன் சந்திப்பு உண்டானது. காவல்துறை அதிகாரியாக ஆதித்யா மாதவன், புது முகம் தான் ஆனால் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என உணர வைத்தார். நிவின் பாலி, துருவ், ரன்பீர் இப்படி பல நடிகர்கள் அவர் முகத்தில் தெரிந்தாங்க.அவர் விஸ்காம் முடிச்சுட்டு, ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிச்சிருக்காரு, மேலும் ஒரு வெப் சீரிஸ் செய்திருக்கார். தெலுங்கில் ஒரு படத்தில் அவர்தான் வில்லன்.
கௌரி கிஷான் நல்ல நடிகை, கண்களிலேயே பல உணர்வுகளை பேசக் கூடிய நடிகை.
-கே. விஜய் ஆனந்த்
