மகா அவதார் பரசுராம் படத்துக்கு ஹாலிவுட் தரத்தில் இசை : சாம் சி எஸ் பேட்டி
தன் இசை மூலம் கடவுளைக் கண் முன் நிறுத்தும் சாம் சி எஸ்
இசைக்கு மொழி தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எல்லைகளை கடந்து பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களுக்கு தன் இசை மூலம் ரசிக்க வைத்து வரும் இசையமைப்பாளர் சாம் சி எஸ், தற்போது மகாபாரத கேரக்டர்லான கடவுள்களுக்கு தன் இசை மூலம் உயிர் கொடுத்து வருகிறார்.இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள சாம்.சி எஸ், ஏற்கனவே மகா அவதார் நரசிம்மா படத்தில் அற்புதமான இசையை கொடுத்து இந்திய அளவில் புகழ்பெற்றார். தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு எதுவென்றால், சாம் சி எஸ் வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு,அதனை அடிப் படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மியூசிக் பஸ்ட் அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்று. இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.
மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சாம் சி எஸ் தனது இசையை உலகத் தரத்தில் வடிவமைத்து வருகிறார். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப,இவரின் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது. சமீபமாக பின்னணி இசைக்கு பெயர் பெற்ற சாம் சி எஸ் பாடல்களிலும் கலக்கி வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.அதில் முக்கியமாக புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் எச் வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் அவரிடமிருந்து பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.
சந்திப்பு கே. விஜய் ஆனந்த்