Take a fresh look at your lifestyle.

திறமை இருந்தும் சினிமாவில் ஜெயிக்க லக் வேணுமா? மனம் திறந்த ஆரவ்

5

திறமை இருந்தும் சினிமாவில் ஜெயிக்க லக் வேணுமா? மனம் திறந்த ஆரவ்

திரை உலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் நுழைவது என்பது மிகவும் கடினம். அதையும் மீறி கிடைக்கும் ஒரு சில வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உச்சம் தொட்ட நடிகர்கள் ஏராளம். உதாரணமாக ரஜினி,அஜித், விக்ரம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் ஆரவ். ஹீரோ, வில்லன் என பிரித்துப் பார்க்காமல் கதையில் என் கேரக்டர் எப்படி உள்ளது என்பதை மட்டுமே பார்த்து படங்களில் நடித்து வரும் ஆரவிற்கு இன்னும் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. நல்ல உடல் கட்டமைப்பு, அழகு, திறமை என அனைத்தும் இருந்தும் அவரால் ஜெயிக்க முடியால் போனதற்கு லக் இல்லை எனலாம். ஆனால் அந்த அதிர்ஷ்ட காற்றை இந்த ஆடி காற்று முலம் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் ஆரவ்.
நாகர்கோவிலில் பிறந்து திருச்சியில் வளர்ந்தவர் இவர், திரைப்படங்களுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் மாடலாகப் பணியாற்றினார். 2015ல் மணிரத்தினம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார்‌. பின்னர் 2016-ல் ‘சைத்தான்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பிரபலமடைந்தார். அதன் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ , ‘ராஜபீமா’, மற்றும் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து அஜித் ‘விடாமுயற்சி’ படத்திலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். இந்த 2 படங்களும் அவருக்கு திறமையான நடிகர் என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. கடந்த மாதம் அருள்நிதி நடித்த அருள்வான் படத்தில் பிரதான கேரக்டரில் நடித்திருந்தார்.அதோடு பெங்களூருவில் ‘ஜாலிவுட் மூவி பார்க்’ என்ற பெயரில் பெரிய பொழுது போக்கு பூங்காவை உருவாக்கியுள்ளார்‌. கடந்த அக்டோபரில் ‘ஆரவ் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக தொடங்கி, அதன் மூலம் தான் நடிக்கும் புதிய படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது சினிமா பயணம் குறித்து கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-

படங்களில் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இருந்தும் வெற்றி தாமதமாக காரணம்?
நான் எப்போதும் எனது முழு திறமையையும் ஒரு படத்தில் மீது போடுவேன். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கதைகளை தேர்வு செய்து நடித்தேன். இருப்பினும் தயாரிப்பாளர்கள் மற்றும் சில இயக்குனர்களின் செயலால் படம் பெரிதாக போகவில்லை.

பிக் பாஸ் வின்னர் மைலேஜ் இருந்தும் ஏன் வெற்றி பெற முடியவில்லை?
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் என்னை அடையாளம் காணும் அளவுக்கு பிரபலம் கிடைத்தது உண்மைதான். ஆனாலும் அந்த புகழை நிலை நிறுத்திக் கொள்ளும் அளவிற்கான கதை இதுவரை எனக்கு சினிமாவில் அமையவில்லை. அதை நோக்கி தான் நான் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அந்த இடம் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

கதையை தேர்வு செய்வது கடினமாக உள்ளதா?
நிச்சயமாக, தற்போதைய காலகட்டத்தில் உலக சினிமா அத்தனையும் அனைவரும் பார்க்கின்றனர். கதை புதிதாக இருந்தால் மட்டும் தான் ஜெயிக்கிறது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதை சரியில்லை என்றால் அந்த படம் தோல்விதான். அப்படி நல்ல கதையை தேர்ந்தெடுப்பது சற்று கடினம் தான். அதே நேரம் படம் வெற்றி பெற்றால் அதற்கு பொறுப்பு ஏற்பது போல் படம் தோல்வி அடைந்தாலும் அதற்கும் ஹீரோ தான் பொறுப்பு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம்?
நான் வளர்ந்து வரும் நடிகர் என்பதால், கதை இருந்தும் தயாரிப்பாளர்கள் அமையவில்லை. அதேபோல் இயக்குனர் கேட்கும் பட்ஜெட்டும் கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் வருடத்திற்கு குறைந்தது 4,5 படங்களாவது நடித்தால் தான் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். ஆனால் அது மற்ற தயாரிப்பாளர்களிடம் அணுகி பெற முடியாது என்பதால் நானே சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஃபர்ஸ்ட் காபி ‌ அடிப்படையில் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்.

நீங்கள் மிஸ் பண்ணிய இயக்குனர்கள் யார்?
பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் முதலில் எனக்கு வேறு ஒரு கதை சொன்னார். அப்போது தயாரிப்பாளர் கிடைக்காததால் அந்த கதையில் நான் நடிக்க முடியாமல் போனது. அதேபோல் டூரிஸ்ட் ஃபேமிலி படைய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் எனக்கு நல்ல நண்பர். அவரும் ஒரு கதை சொன்னார். அதிலும் என்னால் நடிக்க முடியாமல் போனது. இதுபோன்ற இளம் இயக்குனர்கள் கதையில் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தான்.

பஸ் என்றால் பயம்…
பிக் பாஸ் ஆடிஷனுக்காக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் வந்து கொண்டு இருந்தேன். காட்டாங்குளத்தூர் அருகே பஸ் வந்தபோது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு, என் முன்னாள் இருக்கும் இருக்கை வரை அனைவரும் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன். அன்று முதல் இன்று வரை நான் பஸ்ஸில் பயணம் செய்ய மாட்டேன்.