வித்தியாசத்தை விரும்பும் அருள்நிதி
தாத்தா முத்துவேல் பெயரில் கலெக்டர் கேரக்டர்!!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஒரு சில நடிகர்களில் அருள்நிதியும் ஒருவர். அவரின் ஒவ்வொரு படங்களும் வேறு வேறு ஜனர்களில் இருக்கும்படியாக பார்த்துக் கொள்வார். திரையில் அலட்டிக் கொள்ளாமல்,அசால்டாக நடித்து ஆடியன்ஸை தன் பக்கம் திரும்பி பார்க்க வைப்பார். படத்தின் ஓபனிங் முதல் இரண்டு கார்டு வரை நான் இருக்க வேண்டும் என்று சொல்லாமல் என் கேரக்டர் இதில் எப்படி உள்ளது என்பதை மட்டும் பார்த்து நடிக்கும் அருள்நிதி தற்போது அருள்வான் படத்தில் நடித்துள்ளார். அதுவும் தனது தாத்தா முத்துவேல் பெயரில் கலெக்டராக நடித்திருக்கிறார். இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று (17ம்தேதி) ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடிகர் அருள்நிதி அளித்த பேட்டியில் கூறியதாவது:- இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நான் நடிக்கும் 2-வது படம் ‘அருள்வான்’. ஏற்கனவே ‘தகராறு’ படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றினேன். அதன் பிறகு மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று நினைப்போம். ஏதோ ஒரு காரணத்தி னால் ‘செட்’ ஆகாமல் போய்விடும். ஒரு நாள் ‘அருள்வான்’ கதையை என்னிடம் சொல்ல வந்தார். கதையில் குழந்தைதான் முக்கியமான கதாபாத்திரம். கல்வி எவ்வளவு அவசியம் என்று சொல்லக் கூடிய படம் இது என்றார். ஆரவ், ரம்யா ஒரு குழந்தைக்கு பெற்றோராக நடிக்கிறார்கள். அதில் நீங்கள் கலெக்டராக வரவேண்டும் என்று சொன்னார். நீங்கள் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்றும் கூறினார். அதோடு படத்தில் அந்தக் கலெக்டர் கேரக்டர் பெயர் முத்துவேல் என்று சொன்ன உடன் ஒப்புக்கொண்டேன். எனது தாத்தா பெயரில் நான் கலெக்டராக நடிப்பதுடன், கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் என நினைத்து சம்மதித்தேன். படத்தின் கதை என்னிடம் இருந்து தொடங்கி என்னுடனே முடியும் என்று பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.படத்தின் படப்பிடிப்பு குரங்கனி மலையில் நடந்தது. அதுவும் தேனி அருகே பிரம்மாண்டமாக இருந்த மேற்கு தொடர்ச்சி மலையில் நான் உள்பட பட குழுவினர் அனைவரும் சிரமப்பட்டு நடித்தோம். கல்விக்காக மலைவாழ் மக்கள் படும் அவஸ்தையை அப்போது என்னால் உணர முடிந்தது. இந்த படம் நிச்சயம் இது போன்ற பழங்குடியின மக்களின் குழந்தைகள் கல்வி கற்க ஒரு விழிப்புணர்வு படமாக இருக்கும். இந்த படம் மக்களிடையே நிச்சயம் போய் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.அடுத்ததாக நீங்கள் நடித்து வரும் படங்கள் பற்றி கேட்டதற்கு அவர் கூறியது,அடுத்தது என் நடிப்பில் டிமாண்டி காலனி -3 ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மேலும் மைடியர் சிஸ்டர், வேட்டை சாமி ஆகிய படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. விரைவில் வெளியீட்டுக்கு தயாராகும். தற்போது வசந்தபாலன் இயக்கும் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
படத்தில் ஜோடி இல்லாதது வருத்தமா?
இந்த படத்தில் ஜோடி இல்லாதது எனக்கு வருத்தமில்லை. படத்தின் கதைக்கு அந்த கேரக்டர் அவசியமில்லாமல் இருந்தது. ஜோடி வேண்டும் என்பதற்காக ஹீரோயினை நுழைத்தால் அது செயர்கையாக தெரியும் என்பதால் இயக்குனர் தவிர்த்து விட்டார்.

