Take a fresh look at your lifestyle.

திருப்பவனம் காவல் மரணம் “அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் பேரம்?”

58

திருப்பவனம் காவல் மரணம்
“அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் பேரம்?”

அரசை Left Right வாங்கிய ஹைகோர்ட்

திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் வேலைபார்த்த அஜித்குமார் என்பவர் காவல் மரணத்தில் உயிரிழந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வழக்கு விசாரணைக்கு வந்தவுடன் சிவகங்கை SP ஐ இடமாற்றம் செய்துள்ளீர்களே? அவரை இடைநீக்கம் செய்திருக்க வேண்டாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சம்பவம் நடந்த அன்று அஜித்குமாரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவரது உடல் மதுரை கொண்டு வரப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. அவரது தாயாரும், சகோதரரும் 28 ஆம் இரவு 12 மணி வரை தனது மகன் குறித்து விசாரித்துள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த SP, அஜித்தின் அம்மாவிடம்,உங்கள் மகன் இறந்து விட்டார் என கூறியுள்ளார் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், நகை காணாமல் போனது தொடர்பாக எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜூன் 28 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நேற்று இரவே அது ஆன்லைனில் அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. புகார் கொடுத்தவுடன் CSR பதிவு செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது முழுக்க முழுக்க சட்ட விரோதமாக நடந்த காவல் மரணமாகும். தலைமை காவலர் கண்ணன், மானாமதுரை DSP இன் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து, திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறலாகவே பார்க்கப்பட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், அஜித்குமார் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்துள்ளார் என காவல்துறை எப்போதும் போல கதை கூறுகின்றனர். அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அடிப்பதற்கு போலீஸ் எதற்கு? கிராம மக்களிடம் கொடுத்தால் உண்மையை சொல்ல வைத்துவிடுவார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டாலும் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த கேள்விகளுக்கு DGP பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.