Take a fresh look at your lifestyle.

தமிழக பாஜக மாநில தலைவர் திரு நைனார் நாகேந்திரன் அவர்களின் அறிக்கை

49

தமிழக பாஜக மாநில தலைவர் திரு நைனார் நாகேந்திரன் அவர்களின் அறிக்கை

பாரத்தின் துணை குடியரசு தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தர் அண்ணன் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

மாண்புமிகு மகாராஷ்டிரா மாநில ஆளுநர் அண்ணன் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேதகு மகாராஷ்டிர ஆளுநரும் தமிழருமான திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அறிவித்ததன் மூலம் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாட்டு மக்களுக்கு மற்றுமொரு மணிமகுடம் சூட்டியுள்ளது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும், பாஜகவின் தேசியத் தலைவர் மாண்புமிகு திரு. நட்டா அவர்களும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களும் தமிழ் நாட்டு மக்களின் மீது கொண்டுள்ள பேரன்பிற்கு இது மற்றுமொரு சாட்சியாகும்.

தனது வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே மக்களின் நலனையும் தேசியவாதத்தையும் முன்னிலைப்படுத்தி, அயராது உழைத்தவர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள். தென்னை நார் வாரியத்தின் தலைவராக, இந்தியாவின் தும்பு தொழில்துறையை உலக அளவில் உயர்த்தி சாதனை புரிந்தவர். இருமுறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி, நாட்டிற்கும் மக்களுக்கும் அரும்பங்காற்றியவர். 1998-ஆம் ஆண்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலால் ஸ்தம்பித்து நின்ற கோவை மாநகரை மீண்டும் உயிர்ப்பிக்க அவர் ஆற்றிய சீரிய பணி வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

அரசியல் பணிகளைத் தாண்டி, அவரின் எளிமை, ஒழுக்கம், பொதுமக்களோடு கொண்டிருக்கும் ஆழ்ந்த பிணைப்பு ஆகிய சிறந்த குணங்கள் தான் அவரைத் தலைசிறந்த மக்கள் தலைவராக உயர்த்தின. இத்தகைய குணசீலர் இன்று துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, பாஜக எப்பொழுதும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் கட்சி என்பதை வெளிப்படுத்தும் உயிரோவியம்.

தமிழகத்தின் ஆன்மீகம் – கலை – அரசியல் – அறிவியல் அடையாளங்களை இந்தியாவெங்கும், ஏன் உலகமெங்கும் உயர்த்திப் பிடிப்பது பாஜகதான் என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயா அவர்களுக்குப் பின், மீண்டும் தமிழர் ஒருவர் குடியரசுப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளது தமிழர்களின் திறமைக்கு நமது பாரதிய ஜனதா கட்சி அளிக்கும் மதிப்பை உணர்த்துகிறது. சாதனைத் தமிழர்களை உயர்த்திப் பிடிப்பதில் என்றும் முன்னோடி நமது பாஜக தான் என்பதையும் மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது.

இதற்கு முன் நமது ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களைக் குடியரசுத் தலைவராக இரண்டாவது முறையாக முன்மொழிய விழைந்த நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முயற்சியை முறியடித்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி.

ஒரு மாபெரும் சாதனைத் தமிழரான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு எதிராக புரிந்த வாக்களிக்கும் மனநிலையில் இருந்த திமுக அன்று ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்தது என்பதை இந்த சூழலில் நினைவுகூர விரும்புகிறேன். அதே சமயம், அந்தப் பிழையினைத் திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இப்பொழுது அவர்களுக்கு அமைந்துள்ளது. தமிழர் ஒருவர் தேசத்தை வழிநடத்தும் உயரிய பொறுப்பில் இருப்பது நம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். எனவே, வரவிருக்கும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் நமது மண்ணின் மைந்தர் அண்ணன் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஒருமனதாக ஆதரவு அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அண்ணன் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற நமது தாமரை சொந்தங்கள் அனைவரும் நாளை அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, சிறப்பாகச் செயல்பட்டு மாநிலங்களவையையும் நம் தாய்த்திருநாட்டையும் நல்லதொரு பாதையில் வழிநடத்த அண்ணன் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வந்தே மாதரம்!