பிரதமர் இன்டன்ஷிப் திட்டத்தின் சுணக்கத்துக்கு காரணம் என்ன? கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!
PM Internship எனப்படுகிற பிரதமர் இன்டன்ஷிப் திட்டம் செயல்படுத்தப்படும் முறை, அதில் நிலவும் தேக்கங்கள் குறித்து நேற்று (19/08/2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மக்களவையில் கேள்விகளை எழுப்பினார்.
“PM Internship எனப்படுகிற பிரதமர் இன்டன்ஷிப் திட்டம் தொடங்கப் பட்டதிலிருந்து அத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை எத்தனை?
இத்திட்டத்தை செயல்படுத்துதலில் தனியார் நிறுவனங்களுடன் போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததால், PM Internship இல் குறைந்த அளவிலான இளைஞர்களே பங்கேற்கிறார்கள் என்பதை ஒன்றிய அரசு அறிந்துள்ளதா?
அப்படியானால் இத்திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?
இத்திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த ஆட்சேர்ப்புக்கான காரணங்களைக் கண்டறிய அரசாங்கம் ஏதேனும் மதிப்பாய்வு அல்லது மதிப்பீட்டை நடத்தியதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?
PM Internship திட்டத்தை மிகவும் பயனுள்ள வகையில் மறுசீரமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளைக் கனிமொழி கருணாநிதி எம்பி.எழுத்துப்பூர்வமாகக் கேட்டிருந்தார்.
இக்கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் கார்ப்பரேட் விவகாரத்துறை இணையமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா அளித்த பதிலில்,
“பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்டம் (PMIS) 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் சிறந்த 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டன்ஷிப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
கார்ப்பரேட் விவகார அமைச்சகம் அக்டோபர் 3, 2024 அன்று இந்தத் திட்டத்தின் ஒரு முன்னோடித் திட்டத்தை ( பைலட் ப்ராஜக்ட்) தொடங்கியது. இதன்படி ஒரு வருடத்தில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு இன்டன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பைலட் திட்டத்தின் முதல் சுற்றில்,280 தனியார் நிறுவனங்கள் கூட்டு நிறுவனங்களாக இணைந்தன. இவை 1.27 லட்சத்திற்கும் மேற்பட்ட இன்டன்ஷிப் வாய்ப்புகளை முன் வைத்தன.
நாடு முழுவதிலிருந்தும் PMIS போர்ட்டலில் 1.81 லட்சம் வேட்பாளர்களிடமிருந்து 6.21 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவற்றில் 82,000க்கும் மேற்பட்ட இன்டன்ஷிப் ஆஃபர்கள் வழங்கப்பட்ட நிலையில், 28,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஏற்று இன்டன்ஷிப்பில் இணைய முன் வந்தனர்.
முதல் சுற்றில் 8700க்கும் மேற்பட்ட விண்ணப்ப தாரர்களே இன்டன்ஷிப்பில் சேர்ந்தனர்.
பிஎம் இன்டன்ஷிப் இரண்டாவது சுற்று பைலட் திட்டம் 2025 ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கியது.
இந்த சுற்றில் 327 கூட்டு நிறுவனங்கள் நாடு முழுவதிலும் 735 மாவட்டங்களில் 1.18 லட்சத்துக்கும் மேற்பட்ட இன்டன்ஷிப் வாய்ப்புகளை அளித்துள்ளன. 2 லட்சத்து 14 ஆயிரம் விண்ணப்பதாரர்களிடம் இருந்து 4 லட்சத்து 55 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
2025 ஆகஸ்டு 12 ஆம் தேதிய நிலவரப்படி இத்திட்டத்தின் கூட்டு நிறுவனங்கள் 82 ஆயிரம் இன்டன்ஷிப் பயிற்சிகளை அளிக்க முன் வந்தன. இவற்றில் 24 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் இன்டன்ஷிப்பில் இணைந்துள்ளனர்.
நிறுவனங்கள் பயிற்சிக்கான விருப்பங்களை வெளியிடுதல், அவற்றைப் பயிற்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளுதல், சேர்தல் செயல்முறை இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
PM Internship திட்டத்தை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் தொழில்துறை, மாநில அரசுகள், தொழில் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுடன் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தொடர்புகொண்டு, அவர்களை ஒருங்கிணைத்து பணிபுரிந்து வருகிறது.
இத்திட்டம் பற்றிய விவரங்கள் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை சென்று சேரும் வகையில் தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
PMIS முன்னோடித் திட்டத்தின் முதன்மை நோக்கம் இளைஞர்களுக்கு வணிகம் உள்ளிட்ட நிறுவனங்களின் சூழலில் பயிற்சி மற்றும் அனுபவத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதாகும்.
கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் இத்திட்டம் பற்றிய மதிப்பீடு ஆய்வு, கால் சென்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. விண்ணப்பதாரர்கள், தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், மாநில அரசுகள் உள்ளிட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இன்டன்ஷிப் அழைப்பை ஏற்காத விண்ணப்பதாரர்களிடம் அதற்கான காரணங்களும் இந்த மதிப்பீட்டாய்வில் கேட்கப்பட்டன. அதில், கணிசமானோர் இன்டன்ஷிப் வழங்கப்படும் இடம், பயிற்சிக் காலம் ஆகியவை தங்களுக்கு வசதியாக இல்லாத காரணத்தாலும், உயர் கல்வியைத் தொடர வேண்டியிருப்பதால் பங்கேற்க இயலவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
பி.எம் இன்டன்ஷிப் பைலட் திட்டம் என்பது முழு அளவிலான செயல்படுத்தலுக்கு முந்தைய நிலையாகும். திட்டத்தை செயல்படுத்தும் உத்திகள், செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகள் பற்றிய சோதனையாக இது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பைலட் திட்டத்தை செயல்படுத்தும் போது இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பெறப்பட்டுள்ள கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முடிவுகளை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பிஎம் இன்டன்ஷிப் திட்டத்தின் முழு அளவிலான செயல்பாடு அமையும்” என்று ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.