Take a fresh look at your lifestyle.

யூனியன் பிரதேசங்களுக்கு எந்த சட்ட வரையறையும் இல்லாமல் முழு நிதியும் தரப்படுகிறது.

103

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவஞானசம்பந்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒன்றிய அரசு 90 சதவீதமும் மாநில அரசுகள் 10 சதவீதமும் நிதி பங்களிப்பு வழங்கி வந்தன. ஆனால், பெயர் மாற்றம் செய்யப்பட்ட விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தில் ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசுகள் 40 சதவீதமும் நிதி பங்களிப்பை தர வேண்டும். அதே நேரத்தில் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு 100 சதவீதம் ஒன்றிய அரசு நிதி தருகிறது. யூனியன் பிரதேசங்களுக்கு எந்த சட்ட வரையறையும் இல்லாமல் முழு நிதியும் தரப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஏற்கனவே கிராம சபாக்களுக்கு தரப்பட்ட உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஒன்றிய அரசு இந்த ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 51,282 கோடி ஒதுக்கியுள்ளது. இது போதுமானதாக இல்லை. குடும்பத்திற்கு ஆண்டுக்கு 125 நாள் வேலை வழங்கப்பட வேண்டிய நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 50 நாளுக்கு வேலை தருவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.

விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டம் சட்டம் கடந்த டிசம்பர் 22ம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பயனடைந்த கிராமப்புற மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். இது மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. மக்களின் அடிப்படை உரிமையுடன் இணைந்த திட்டங்களை திரும்ப பெற முடியாது. இது பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிரானது. எனவே, கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளிவந்த விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டம் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அந்த திட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.