இரட்டிப்பு மகிழ்ச்சியில் துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவில் நல்ல கேரக்டர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் ஹீரோயின்கள் ஒரு ரகம். கிளாமராக நடித்து தாராள கவர்ச்சி காட்டி இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் நடிகைகள் மற்றொரு ரகம். இதில் முதல் ரகத்தை சேர்ந்த சேர்ந்தவர் நடிகை துஷாரா விஜயன். தன்னுடன் நடிப்பது பெரிய ஹீரோவா, அப் கம்மிங் ஹீரோவா என பார்க்காமல், படத்தில் தனது கதாபாத்திரம் என்ன என்பதை மட்டும் பார்த்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதனால்தான் குறுகிய காலத்தில் ரஜினி படம் வரை அவரால் நடிக்க முடிந்தது. 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய புகழினைப் பெற்றார். மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகருகிறது,அருள் நிதியுடன் கழுவேத்தி மூர்க்கன் மற்றும் வசந்தபாலன் இயக்கிய அநீதி படத்திலும் நடித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு தனுஷுடன் ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தார்.குறிப்பாக இதில் துஷாரா விஜயனின் ஆக்ஷன் காட்சிக்கு பாராட்டு கிடைத்ததும். அந்தப் படம் தேசிய விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தா. செ.ஞானவேல் இயக்கத்தில்
ரஜினியுடன் வேட்டையன் படத்தில் ஒரு திருப்புமுனை கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். இது தவிர மலையாளத்திலும் ஆண்டனி வர்கீஸ் இயக்கத்தில் கட்டாளன் படத்தில் நடித்துள்ளார். மேலும் எக்ஸாம் என்ற வெப் தொடரிலும் நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிகர் மாதவனின் மனைவியாக ரங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இப்படம் இன்று 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனை தொடர்ந்து விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் படத்தில் விஷால் மனைவியாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக துஷாரா நடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்த மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் துஷாரா நடிப்பில் வெளியாவது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதுகுறித்து துஷாரா விஜயம் கூறுகையில், இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. எனது கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பரிசாகவே கருதுகிறேன். எனக்கு படங்களின் எண்ணிக்கையை விட எனது கேரக்டர் எப்படி இருக்கிறது என்பதையே நான் விரும்புகிறேன். ஒவ்வொரு படமும் எனது முதல் படம் போலவே 100 சதவீத ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். இனிவரும் காலங்களிலும் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஒப்புக்கொள்வேன். தற்போது மற்ற லாங்குவேஜிலும் படங்களில் நடித்து வருகிறேன். அதோடு வெப் சீரிஸ்களிலும் நல்ல கதையும் உள்ள தொடர்களில் நடித்து வருகிறேன். தற்போது வெளியாக உள்ள ஜிடிஎன் மற்றும் மகுடம் இரண்டு படத்திலும் எனது கேரக்டர் நிச்சயம் பேசப்படும் என்றார்.
ரஜினி முதல் விஷால் வரை…
நான் சினிமாவுக்கு வந்து இந்த ஏழு ஆண்டுகளில் 10 படங்களில் நடித்துள்ளேன். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், ஆர்யா, மாதவன், விஷால், அர்ஜுன் தாஸ், அருள்நிதி என பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.

