Take a fresh look at your lifestyle.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கடைசி ‘U-Girder’ தயாரிப்புப் பணி வெற்றிகரமாக நிறைவு!

5

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கடைசி ‘U-Girder’ தயாரிப்புப் பணி வெற்றிகரமாக நிறைவு!
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகரான AEON மற்றும் ஒப்பந்ததாரரான L&T நிறுவனத்துடன் இணைந்து, வழித்தடம் 5-ல் ஆதம்பாக்கம் மெட்ரோ நிலையப் பணிகளுக்காக, 19.5 மீட்டர் நீளமுள்ள கடைசி U-Girder (மெட்ரோ இரயில் பாதையைத் தாங்கி நிற்கும் பிரம்மாண்ட ‘U’ வடிவ கான்கிரீட் பாலம்) தயாரிக்கும் பணி, அதன் பிரத்யேக கட்டுமானப் பணிமனையில் (ECV-02 Casting Yard) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதன் மூலம், சென்னை மெட்ரோ இரயில் திட்டங்களிலேயே மிக பிரம்மாண்டமான பணிகளில் ஒன்றான, மொத்தம் 824 U-Girders தயாரிக்கும் மிகப்பெரிய இலக்கு முழுமையாக எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்ட வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ‘U-Girder’ தயாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
43 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த C5 ECV-02 Casting Yard, சென்னை மெட்ரோவின் 2-ஆம் கட்ட திட்டத்திலேயே மிகவும் விறுவிறுப்பாகவும், அதிக அளவிலும் கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு முக்கியத் தளமாக விளங்கி வருகிறது. வழித்தடம் 5-ல் அமையவிருக்கும் 13.1 கி.மீ. நீள உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களின் கட்டுமானத்திற்குத் தேவையான பிரம்மாண்டமான கான்கிரீட் பாகங்களைத் தயாரிப்பதற்காக, இந்தத் தளம் திட்டமிடப்பட்டு 6 பிரத்யேகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது.
இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 5,836 கட்டுமானப் பொருட்கள் (Precast elements) முன்கூட்டியே தயாரிக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 1.2 லட்சம் கன மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்படுவதுடன், இதன் மொத்த எடை கிட்டத்தட்ட 3 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தயாரிக்கப்படும் முக்கிய கட்டுமானப் பொருட்களின் விவரம்:
* 302 தூணின் மேல் பகுதி (Pier Caps)
* 1465 தூணின் பக்கவாட்டு பகுதி (Pier Arms)
* 824 ‘U’ வடிவ தாங்கு பாலங்கள் (U-Girders)
* 2055 ‘I’ வடிவ தாங்கு பாலங்கள் (I-girders)
* 194 ‘T’ வடிவ தாங்கு பாலங்கள் (T-girders)
* 68 Portal U-வடிவ அமைப்புகள் (shells) மற்றும் 1079 பாதுகாப்பு கைப்பிடிச் சுவர்கள் (Parapets)
இவ்வளவு பிரம்மாண்டமான இந்த அனைத்துப் பொருட்களும், அவை தயாரிக்கப்படும் Casting Yard-ல் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதுவே இந்தத் திட்டத்தின் பிரம்மாண்டத்திற்கும், அதன் சவாலான தொழில்நுட்பத்திற்கும் மிகச்சிறந்த சான்றாகும்.
இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய சாதனை, ஹைட்ராலிக் அமைப்புகளுடன் (hydraulic systems) கூடிய தானியங்கி U-Girder mould தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது ஆகும். இந்தியாவில் U-Girder தயாரிப்பில் இத்தகைய அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த புதிய முறையின் மூலம், பணிகள் அனைத்தும் கணினி கட்டுப்பாட்டுக்கருவி வழியாக தானியங்கி மயமாக்கப்பட்டன. இதனால் பணியிடப் பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் தரம் அதிகரித்ததோடு, வேலை நேரமும் கணிசமாகக் குறைந்ததது.
இந்தத் திட்டத்தில், மிகச்சிறிய அளவிலான 8.9 மீ நீளமுள்ள U-Girder முதல், இந்தியாவின் மிக நீளமான 33.33 மீ. நீளமுள்ள U-Girder வரை தயாரிக்கப்பட்டுள்ளன. 225 மெட்ரிக் டன் எடையுள்ள இந்த மாபெரும் U-Girder தயாரித்தது, எங்களது குழுவின் பொறியியல் திறமைக்கும், வடிவமைப்பு நுணுக்கத்திற்கும், சவாலான பணிகளை விரைந்து முடிக்கும் ஆற்றலுக்கும் சான்றாகும். எவ்வித தொழில்நுட்பக் குறைபாடுகளும் இன்றி, இந்தத் தயாரிப்புப் பணி மிக வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது இந்திய மெட்ரோ இரயில் கட்டுமான வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், கூடுதல் பொது மேலாளர் திரு.சி.முரளி மனோகரன் (உயர்மட்ட கட்டுமானம்), திரு. வினோத் (குடியிருப்புப் பொறியாளர் / பொது ஆலோசகர்), திரு. பார்த்திபன் (மூத்த துணை குடியிருப்புப் பொறியாளர் / பொது ஆலோசகர்), திரு. கே. கிருஷ்ண பிரபாகர் (திட்ட பொறுப்பு / L&T), திரு. இளங்கோ (திட்ட மேலாளர் / L&T), திரு. உபேந்தர் (வார்ப்புப் பணிமனை மேலாளர் / L&T), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் L&T நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.