இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் விமர்சனங்களை தவிர்த்திட வேண்டுகோள்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடித்து வரும் இயக்கமாகும். யாரையும் வசைப்பாடக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருக்கிறோம். நீண்ட காலமாக தி.மு.கழகத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழமை கொண்டிருந்த நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பை மதித்து பா.ஜ.க. அனுசரணையுடன் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற பரந்த நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய துணை நின்றிருக்கின்றோம். இம்முடிவை தி.மு.க. நண்பர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நண்பர்களும் மறுப்பு தெரிவித்து கடும் சொற்களை பயன்படுத்தி வருவது வருத்தத்தை அளிக்கின்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் கட்டிக் காத்த ‘கண்ணிய அரசியல் பாதை’யில் பயணிப்போம்! விமர்சனங்களை தவிர்த்து புதிய அரசின் மூலம் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை கடமை உணர்வோடு மேற்கொண்டிட கேட்டுக் கொள்கிறேன்.
(ஒப்பம்) பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்