Take a fresh look at your lifestyle.

சென்னை ஐஐடிவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

100

சென்னை ஐஐடி, பின்லாந்து வானிலை ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து காலநிலை மாற்றம் குறித்து ஆராய அறிவு மையத்தை உருவாக்க உள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடிவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடி, பின்லாந்து வானிலை ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து வாயு (VAYYU) என்ற அறிவு மையத்தை உருவாக்குகிறது. இது ஏரோசல்-வானிலையியல் தொடர்புகள், இமயமலை வளிமண்டலம்- கிரையோஸ்பியர் தொடர்புகள், நகர்ப்புற காற்று பற்றிய மெய்நிகர் ஆராய்ச்சி மையமாகும்.

இந்த புதிய மையம், மேம்பட்ட உருவகப்படுத்தல்கள், அதிநவீன கண்காணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். பிராந்திய நீர்-காலநிலை, இமயமலையின் பனி, பனியாறு உருகுதல், இந்தியப் பெருநகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் ஆகியவற்றின் மீது ஏரோசல்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும். சமீபத்தில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒத்துழைப்பை வரவேற்றுப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், ‘காலநிலை மாற்றம் மற்றும் கண்காணிப்பு உலகளாவிய தளத்தில் ஆராயப்பட வேண்டிய மிக முக்கியமான துறையாகும். இந்த மிக முக்கியமான ஆராய்ச்சியில், பின்லாந்து வானிலை ஆய்வு மையத்துடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

இதுகுறித்து பின்லாந்து வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் பெட்டரி தாலாஸ் கூறுகையில், ‘இந்தியாவும் இந்த பரந்த உலகமும் முக்கிய சவால்களை எதிர்கொள்ள, இமயமலை ஏரோசல்கள் மீதான மூன்று ஆண்டுகால கூட்டுப் பணியினை மேற்கொள்ள இருக்கிறோம். இந்த கூட்டாண்மை காலநிலை அறிவியல், நகர்ப்புற நிலைத்தன்மை மற்றும் அடுத்த தலைமுறை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்தியா-பின்லாந்து ஒத்துழைப்பை கணிசமாக மேம்படுத்தும். அத்துடன் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் மெட்ராஸ் ஐஐடி-யின் உலகளாவிய ஈடுபாட்டையும் வலுப்படுத்துகிறது’ என்றார்.