நெல்லை: “சும்மா ஆர்ப்பாட்டம்னா எப்படி.. கொஞ்சம் கலகலப்பா வேண்டாமா?” என்பது போல, நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே இன்று நடைபெற்ற அதிமுக – பாஜக கூட்டணியின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு அதிரடி சம்பவம் அரங்கேறியது. மேடையில் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் திமுக அரசை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு மூதாட்டி திடீரென “ரூட் மாற்றி” கேள்வி கேட்கத் தொடங்கினார். “யம்மா ஒரு நிமிஷம்.. எங்க வீட்டுப் பிள்ளைகளுக்கு சென்ட்ரல் கவர்மென்ட் வேலை எங்கே?” என அவர் விடாமல் கேட்க, ஒரு நிமிடம் மேடையே ஆடிப்போனது. அந்தப் பாட்டியின் மைக்கில்லாத சத்தத்தை ‘கேட்காதது போல’ தமிழிசை சமாளித்துப் பார்த்தும், பாட்டி விடுவதாக இல்லை! உடனே அங்கிருந்த ‘அன்பான’ அதிமுக நிர்வாகிகள், பாட்டிக்கு ‘வழி காட்டி’ வெளியேற்ற முயல, நிலமையைப் புரிந்துகொண்ட தமிழிசை, “பாருங்கம்மா.. ஸ்டாலின் வேலை கொடுக்கணும், அப்புறம் பிரதமரோட ஒண்ணா இருக்கணும்” என மழுப்பலாக ஒரு தத்துவத்தைப் போட்டுவிட்டு பேச்சைத் தொடர்ந்தார். பாட்டியின் ‘வேலை’ கேள்விக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ, அவர் மட்டும் பாதுகாப்பாகக் கூட்டத்தை விட்டு ‘வெளியேற்றப்பட்டது’ தான் ஹைலைட்!