Take a fresh look at your lifestyle.

இஸ்லாமியர்களை எந்தவகையிலும் திரெளபதி-2 காயப்படுத்தாது: மோகன் ஜி திட்டவட்டம்

137

’ இஸ்லாமியர்களை எந்தவகையிலும் திரெளபதி-2 காயப்படுத்தாது: மோகன் ஜி திட்டவட்டம்

தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன் இயக்குனரான மோகன். ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திரௌபதி- 2. ஏற்கனவே இவர் இயக்கி வெளியாகி வெற்றி பெற்ற வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வரலாற்று கதை களத்துடன் இந்த முறை களம் காண்கிறார் இயக்குனர் மோகன் ஜி.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தியுடன் இணைந்து தயாரித்த இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் தியேட்டர்கள் அதிக அளவில் கிடைக்காததால் வரும் 23ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மோகன்.ஜி,படம் குறித்து கூறியது:-“பீரியட் படம் இது என்பதால் முதல் படம் போலவே சின்சியராக வேலை பார்த்தேன். எனது தொழில்நுட்பக் குழுவினர் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் 31 நாட்களுக்குள் படம் எடுப்பது சாத்தியமே இல்லை. ரிச்சர்ட் சார் இல்லாமல் ‘திரெளபதி2’ இல்லை. இந்தப் படத்திற்காக இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. குதிரை பயிற்சி, கத்தி சண்டை என ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார். நான் சொன்ன பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாய் போயிருந்தாலும் கதை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி. படத்தின் முக்கியமான நபர் ஒளிப்பதிவாளர் சுந்தர். நான் எதிர்பார்த்ததை போலவே சிறப்பான தரமான பணியைக் கொடுத்துள்ளார். அவருக்கு இணையான உழைப்பை கலை இயக்குநர் கொடுத்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றால் பலருக்கும் உந்துதலாக இருக்கும்.
25 ஹீரோயின்களை பார்த்த பிறகு ரக்‌ஷனாவை தேர்ந்தெடுத்தேன். மிகவும் தைரியமானவர். திறமையான நடிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பரணியுடன் முதல் படத்திலேயே வேலை செய்ய வேண்டியது. ஐந்தாவது படத்தில்தான் அது கைகூடியுள்ளது. அவர் பேசும் வசனம் படத்தில் முக்கியமானது. சிராக் ஜானி, தினேஷ் லம்பா ஆகிய இரண்டு பேரும் மும்பையை சேர்ந்தவர்கள். இரண்டு பேரின் நடிப்பும் நிச்சயம் பேசப்படும். மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கும் தமிழ் தெரியாது என்றாலும் புரிந்து கொண்டு நடித்துள்ளனர். நட்டிக்கு சிறப்பான உடல்மொழி உள்ளது. அவருடைய கரியரில் இந்த கதாபாத்திரம் நிச்சயம் மணிமகுடமாக இருக்கும். வேல ராமமூர்த்தியன் நடிப்பும் குரலும் சிங்கம் கர்ஜிப்பதுபோல இருக்கும். தென்மாவட்டத்தை சார்ந்த நல்ல கதை அவரிடம் இருந்து எனக்கு வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
எழுத்தாளர் பத்மாவை பெண் சாண்டில்யன் என சொல்வார்கள். நிறைய புது தமிழ் வார்த்தைகளை இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அருமையான பல கதைகள் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் அவருக்கு உண்டு. அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலையால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு கதை எடுப்பதுதான் முதலில் எங்கள் திட்டம். அந்த சமயத்தில் காசி சென்றிருந்தேன். நான் சிவபக்தர். அங்கு ஒரு கோயிலுக்கு சென்றபோது அங்கிருந்த நந்தி, நம் இஸ்லாமிய மக்கள் வழிபடும் ஞானவாபி மசூதியை பார்த்தார்போல இருந்தது. அதை பற்றி விசாரித்தபோது ஒளரெங்கசீப் அங்கிருந்த கோயிலை நோக்கி மசூதி உருவாக்கிய வரலாறு தெரியவந்தது. அது தமிழ்நாட்டுடனும் கனெக்ட் ஆகிறது. அதைப்பற்றி விரிவாக படித்தவுடன் இதுதான் நான் பண்ண வேண்டிய படம் என முடிவு செய்தேன். ’சாவா’ படம் பார்த்தபிறகு என் நம்பிக்கை இன்னும் அதிகமானது. ஜிப்ரான் சார் இந்தப் படத்திற்குள் வந்ததும் இந்தப் படம் இன்னும் பெரியதானது. எம் கோனே பாடல் இப்போது பத்மலதா மேடம் குரலில்தான் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவருக்கு நன்றி. பல இடங்களில் அவரது இசை உணர்வுப்பூர்வமாக உள்ளது. நம்முடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்திய இஸ்லாமியர்களை இந்தப் படம் எந்தவகையிலும் காயப்படுத்தவில்லை. அவர்களின் தொடக்கம் எது என்று இந்தப் படம் புரிய வைக்கும். மற்றபடி கமர்ஷியலான படம்தான் இது. வீரபாண்டிய கட்டபொம்பன், சிறை, மதரசாப்பட்டிணம் போன்ற படங்களில் பிரிட்டிஷ்காரர்களை காட்டும்போது மத, அடையாளங்கள் இல்லாமல் அவர்களை பிரிட்டிஷ்காரர்களாக மட்டுமே எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல இந்தப் படத்தை துருக்கியில் இருந்து நம் நாட்டை கைப்பற்ற வந்த அந்நியர்களாக எண்ணிதான் கதையை நான் எழுதியுள்ளேன். அவர்களின் வாழ்க்கையை மத அடையாளங்களோடு தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள். இந்த நாட்டை அடிமைப்படுத்த துருக்கியில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் பற்றிய கதை. மூன்று வில்லன்கள் படத்தில் உள்ளனர். ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது.வீர வல்லாள மகாராஜா வரலாற்றை வெளியே கொண்டு வருவது எனக்கு பெருமை. உங்கள் அனைவரையும் ‘திரெளபதி2’ திருப்திப்படுத்தும்” என்றார்.