ஒன் லாஸ்ட் சான்ஸ்…; ஒன் லாஸ்ட் செலிபிரேஷன்…!!
தியேட்டரில் ரசிகர்களுக்கு தளபதி கச்சேரி
தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான சி. ஜோசப் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் திருவிழா போன்ற கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட சிக்கல் மற்றும் சென்சார் தடைகளை கடந்து 7 மாத கால போராட்டத்திற்கு பிறகு இந்த படம், சுமார் 30 நாடுகளில் 8,000-க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ஜனநாயகன், முதல் நாளிலேயே வசூலில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, பேண்ட் வாத்தியம் முழங்க நடனமாடி முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடினர். சில இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பெண் ரசிகர்கள் சிலர், பொங்கல் பண்டிகையை நினைவூட்டும் வகையில் கரும்பு வைத்து மண்பானைகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து கொண்டாடினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கம் வளாகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டு வந்து படம் பார்த்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ரசிகர்களுடன் இணைந்து படத்தை ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானபோது இருந்த அந்த உற்சாகத்தை இன்று மீண்டும் உணர்ந்ததாக கூறினார். மேலும், “இந்த படம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், தமிழர்கள், சினிமா ரசிகர்கள் பார்த்து வியக்க வேண்டிய படமாகும்,” என்று தெரிவித்தார்.
முதல்வர் விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை வெங்கட் கே. நாராயணா, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 183 நிமிடங்கள் ஆகும்.
பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெற்றி பெற்ற பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக்கான ஜனநாயகன், அதன் உணர்ச்சி சாரத்தை தக்கவைத்துக்
கொண்டு அரசியல் பின்னணியுடன், விஜய் ஸ்டைலில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க கமர்ஷியல் படமான இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
தமிழக தேர்தலுக்கு முன்பு பொங்கல் வெளியீடாக ஜனவரியில் வெளியாக திட்டமிடப்பட்ட இப்படம், தணிக்கை சிக்கல்களால் தாமதமானது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்த நிலையில், தற்போது அனைத்து தடைகளையும் கடந்து வெளியானதால், ஜனநாயகன் விஜயின் சினிமா வாழ்க்கைக்கு மாபெரும் விடை கொடுக்கும் படமாகவும், அவரது அரசியல் பயணத்தின் புதிய தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
படத்தில் நடித்துள்ள 3 அமைச்சர்கள்
முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஆனந்த், அருண் ராஜ், ஸ்ரீநாத் ஆகியோர் ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளனர்.
கெஸ்ட் ரோலில் நடித்த பிரபலங்கள்
முதல்வர் விஜயின் கடைசி படம் என்பதால் இதில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அட்லீ ஆகியோருடன் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணன் உள்ளிட்டோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.
திமுக அட்டாக் வசனங்கள்
எதிர்க்கட்சியான திமுகவை விமர்சித்து மறைமுகமாக பல வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக பிரகாஷ்ராஜ் பேசும் வசனம், “நான் 50 ஆண்டு காலமா அரசியலில் இருக்கிறேன்.என் தாத்தா, என் அப்பா, இப்ப நான், என் மகன் ,என் பேரன்” தியேட்டரை அதிர வைக்கிறது.
ஏஐ மூலம் வாழ்த்திய எம்ஜிஆர்
எம் ஜி ஆரை போல் சவுக்கடி கொடுக்கும் விஜய்க்கு ஏஐ மூலம் எம்ஜிஆர் வாழ்த்துவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.






