விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் மரணம் !
சட்டப்படி நடவடிக்கை எடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
அரியலூர் மாவட்டம், செந்துறை காந்திநகரில் ம.சுப்பிரமணியன் என்பவரின் வீட்டில் செப்டிக்டேங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செந்துறை காந்திநகரைச் சேர்ந்த ராமச்சந்திரன், திருவாரூர் மாவட்டம் சீனிவாசபுரத்தை சேர்ந்த பாஸ்கர், திருவாரூர் மாவட்டம், கைலாச நாதர் கோயில் தெருவைச் சேர்ந்த தினகரன் ஆகிய மூன்று தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த துயரச்செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.
தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை இன்னமும் தொடர்வதை அனுமதிக்க முடியாது. இக்குறிப்பிட்ட மரணங்கள் தொடர்பான வழக்கை 2013-ம் ஆண்டின் கையால் மலம் அள்ளுவோர் பணியமர்த்தல் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம்” (PEMSR Act, 2013) படி வழக்குப் பதிவு செய்திட வேண்டும். மேலும், இச்சட்டத்தின் படி உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்தினருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.