கான்சிட்டி கேரக்டர் எனக்கு பெரிய சவாலாக இருந்தது:
மனம் திறந்த அன்னா பென்பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கான் சிட்டி படத்தில் அர்ஜூன் தாஸ் ஜோடியாக அன்னா பென் நடித்துள்ளார். இப்படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது. இதை ஒட்டி நடந்த பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை அன்னா பென் பேசியது, இது எனது இரண்டாவது தமிழ் படம். ‘கொட்டுக்காளி’ படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த மீனா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில் தான் ‘கான் சிட்டி’ படத்தில் நடித்திருக்கிறேன்.இயக்குநர் ஹரிஷ் முதன் முதலில் இந்தக் கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இருக்கும் கேரக்டர் அது.கதாபாத்திரத்தின் அளவும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதனால் அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் இதில் அடித்தால் எனது நடிப்பு பாணியும்,திறமையும் வெளிப்பாடும் என்பதால் இதில் நடிக்க சம்மதித்தேன்.பல கமர்ஷியல் கதைகளை நான் இதற்கு முன் கேட்டிருந்தாலும், அந்த உலகத்தில் நான் எப்படி பொருந்துவேன் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குனர் ஹரிஷ் என்மீது முழு நம்பிக்கை வைத்தார். ‘நீங்கள் இதைச் செய்ய முடியும். இது வித்தியாசமாகவும், யாரும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கும்’ என்று தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தினார். அந்த நம்பிக்கையே இந்தக் கதாபாத்திரத்தை செய்ய எனக்கு தைரியம் கொடுத்தது. அர்ஜூன் தாஸுடன் பலமுறை இணைந்து பணியாற்ற முயற்சி செய்திருந்தேன். இந்தப் படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது. ஒரு நடிகராக அவர் திறமையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு மனிதராகவும் அவர் மிகவும் எளிமையான வர், வடிவுக்கரசி மேம் ஒரு லெஜெண்ட். அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு கனவு நிறைவேறிய அனுபவம்.‘கான் சிட்டி’ படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இதுபோல் நல்ல கதைகள் வந்தால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன் என்றார்.
என் ஆயுளை டபுள் ஆக்கிய யோகி பாபு
நடிகர் யோகி பாபு பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் என்னுடைய ஆயுளை பத்து வருடம் அதிகரித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் எப்போதும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். காட்சிக்கு நடுவிலும், கேமரா பின்னாலும் அவர் சொல்வதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கும். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.

