Take a fresh look at your lifestyle.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

27

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 11-
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை மார்ச் 11ஆம் தேதி இரவு 8 மணிக்கு கையெழுத்தானது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் திமுக அமைத்துள்ள தொகுதி பங்கிட்டு குழு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக,முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதி செய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இரண்டு கட்ட சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைவர் துரை வைகோ புதன்கிழமை மார்ச் 11ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருகை தந்து திமுக குழுவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், சு.ஜீவன், வி.சேஷன் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தை குழுவினர் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கட்சித் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நான்கு தொகுதியில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்திலும் போட்டியிடுகிறது.