தமிழ் படங்கள் தான் எனது இலக்கு: நல்ல கேரக்டருக்காக காத்திருக்கிறேன் நிதி அகர்வால்
தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் நிதி அகர்வால் முதலில் இந்தியில் 2017ம் ஆண்டு வெளியான முன்னா மைக்கேல் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 2018ல் தெலுங்கில் சவ்யஸச்சி படத்திலும், 2021ல் தமிழில் ஈஸ்வரன் படத்திலும் நடித்த தெலுங்கு மற்றும் தமிழில் நடிகையாக அறிமுகமானார். 2019ல் ரிலீஸ் ஆனா ஸ்மார்ட் ஷங்கர் படம் அவரை முன்னணி நடிகையாக மாற்றியது., கலகத்தலைவன் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பான் இந்திய நடிகையாக அறியப்பட்டார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ள அவர், திரையுலகில் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார். அதிக படங்களில் நடிக்க வேண்டும், தொடர்ந்து வளர வேண்டும், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கம். அவரை பொறுத்தவரை, வெற்றி என்பது தனது திரைப்படங்களின் எண்ணிக்கையை மட்டுமே சார்ந்தது அல்ல. ஒரு நடிகையாக வளர்வதற்கான பயணம், உழைப்பு மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளே அவருக்கு முக்கியம் எனக் கூறியுள்ளார். தனது திரை பயணம் பற்றி நடிகை நிதி அகர்வால் பகிர்ந்து கொண்டதாவது, “எனது இலக்கு தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. இயல்பிலேயே நான் கடினமாகஉழைப்பவள். நான் எங்கு செல்ல விரும்புகிறேனோ, அந்த இடத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் பல்வேறு மொழிகள், புதிய கதைக்களங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் எனது நடிப்புப் பயணத்தை மேம்படுத்தி வருகிறேன்.முன்னணி நடிகர்களின் பிரம்மாண்டமான படங்களில் முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களில் நடித்து என்னை சுருக்கிக்கொள்ள விரும்ப வில்லை. பெரிய ஹீரோ பிரம்மாண்டம் என்பதை தாண்டி ஒரு நடிகையாக எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ள நல்ல கதையம்சம் உள்ள படங்களையும், கதாபாத்திரங்களையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.இதற்கான களம் தமிழ் சினிமா தான் என்பது எனக்கு தெரியும். திரையுலகிலும் ரசிகர்களின் மனதிலும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வகையில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.