லவ் சீக்ரெட் சொல்லும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

லவ் சீக்ரெட் சொல்லும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

இயக்குனர், தயாரிப்பாளர், கிரியேட்டிவ் ஹெட் என பல முகங்களைக் கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த், தற்போது #லவ் என்ற வெப் தொடரை ஷோ ரன்னராக பொறுப்பேற்று தயாரித்துள்ளார். அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்தத் தொடர் நவீன கால காதல், உறவுகள், டேட்டிங் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்த தொடருக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தத் தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று 2-ம் தேதி வெளியாகிறது.இந்தத் தொடர் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் வருமாறு:-

கே: #லவ்தொடரை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது?
ப: எனக்கு எப்போதுமே காதல் மற்றும் ரொமான்ஸ் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. திரையில் காதல் காட்சிகளைப் பார்ப்பதையும் நான் மிகவும் விரும்புவேன். இந்த தொடரில் காதலை வெவ்வேறு கோணங்களில் கையாண்டிருக்கிறோம். இந்தத் தொடர் ஜென் இசட் தலைமுறையின ருக்கு மட்டுமின்றி அனைத்துவயதினரிடமும் தொடர்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

கே: இந்த தொடரின் முக்கிய அம்சம் என்ன?
ப: “காதல்தான் கதையின் உயிர்” என்று சொல்லலாம். நவீன காலத்தில் காதல் மற்றும் உறவுகள் எப்படி மாறியிருக்கின்றன, தொழில்நுட்பம் அவற்றில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்தத் தொடரில் சுவாரஸ்யமாக சொல்லி உள்ளோம்.

கே: நெட்ஃபிளிக்ஸுக்காக தொடரை தயாரித்த அனுபவம் எப்படி இருந்தது?
ப: நெட்ஃபிளிக்ஸுக்காக ஒரு தொடரை தயாரிப்பது மிகப்பெரிய வாய்ப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த நவீன காதல் கதையை உருவாக்கும்போது, இதை இயக்க பாலாஜி மோகன்தான் சரியான நபராக இருப்பார் என்று நினைத்தோம். அவர் கதைக்குத் தேவையான சரியான அணுகுமுறையையும் உணர்வையும் கொண்டு வந்திருக்கிறார்.

கே: அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணி எப்படி அமைந்தது?
ப: இருவரும் இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தார்கள். அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியின் கூட்டணி புதுமையாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கும். இருவரும் திரையில் மிகச் சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களை ஒன்றாகப் பார்ப்பதை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்.

கே: உங்கள் தந்தை ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக எடுக்கும் எண்ணம் இருக்கிறதா?
ப: என்னுடைய அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போல பார்க்கிறேன். ஒரே சூரியன், ஒரே சந்திரன்… என்னுடைய அப்பா மட்டும்தான். அதை நான் பெருமையாகச் சொல்வேன். முதலில் அவர் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி புத்தகமாக வெளியிடட்டும். அதன்பிறகு என்னுடைய அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக எடுக்கலாம்.

கே: கோச்சடையான் படத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: கோச்சடையான் படம் வெளியானபோது அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் இப்போது அதைப் பற்றி பேசுகிறார்கள். நிச்சயமாக இன்னொரு அனிமேஷன் படத்தை இயக்குவேன்.

கே: கமல்ஹாசனின் மகள்களுடன் இணைந்து நடிப்பீர்களா?
ப: அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள்.(சிரித்தபடி)

கே: மீண்டும் இயக்குநர் சௌந்தர்யாவை எப்போது பார்க்கலாம்
ப: 2027-ம் ஆண்டு முதல் என்னுடைய இயக்கும் பணியைத் தொடங்க உள்ளேன்.
கே: அது படையப்பா 2 படமாக இருக்குமா?
ப: இல்லை. வேறு கதையை தயார் செய்து வருகிறேன்.

மூடப்படும் ராகவேந்திரா கல்யாண மண்டபம்
ராகவேந்திரா கல்யாண மண்டபம் நம்ப சென்னையில் ஒரு ஐகானிக் ஸ்பாட் என்று சொல்லலாம். 36 ஆண்டுகளாக அது எங்கள் குடும்பத்தில் இருக்கிறது. ஒரு காலகட்டம் முடிவுக்கு வரும்போது அடுத்த கட்ட பரிணாமத்துக்கு செல்ல வேண்டியது அவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

Comments (0)
Add Comment