கட்டா குஸ்தி-2 விமர்சனம்
தன் மனைவி ஐஸ்வர்யா லட்சுமி ரெஸ்லிங் போட்டியில் ஜெய்ப்பதற்காக ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக இருந்து கொண்டு, அவரையும் ஊக்குவித்து குழந்தையையும் பள்ளிக்கு அனுப்பி பார்த்துக் கொள்கிறார் விஷ்ணு விஷால். இந்த நிலையில் ஒரு போட்டியில் ஐஸ்வர்யா தோல்வியடைய குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. அது பெரிய சண்டையாக மாறி டைவர்ஸ் வரை செல்கிறது .இறுதியில் என்ன ஆனது? இருவரும் சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.
முதல் பாகத்தில் ஹீரோ விஷ்ணு விஷாலை பில்டப்பாக காண்பித்து இறுதியில் ஐஸ்வர்யா லட்சுமியின் அதிரடி முகத்தை காட்டி படத்தை நகர்த்திருந்த இயக்குனர் செல்லா அய்யாவு, இந்த பாகத்தில் இரண்டு பேருக்கும் முக்கியத்துவம் கொடுத்து தண்டவாளத்தில் செல்லும் ரயிலை போல் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து சென்றால் கடைசி வரை பயணிக்கலாம் என்பதை காமெடி கலந்து அழகாக சொல்லி இருக்கிறார். படம் முதல் பாதியில் சற்று தொய்வு இருந்தாலும் இரண்டாம் பாதியில் பிக்கப் செய்துள்ளார்.முதல் பாகத்தை விட நடிப்பில் முதிர்ச்சி காட்டி, எந்தவித ஹீரோ பில்டப்பும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் போல அழகாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். ஒரு ரெஸ்லர் எப்படி இருப்பாரோ அதை அப்படியே திரையில் காட்டி நடித்துள் ளார் ஐஸ்வர்யா லட்சுமி. குழந்தை சாராவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள் ளார். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், கருணாகரன், மோக்க்ஷா ஆகியோர் நடிப்பு படத்துக்கு பலம். கேமியோ ரோலில் நடித்துள்ள யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் காட்சிகள் கலகலப்பு. கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு மற்றும் ஷான் ரோல்டன் இசை பர்ஃபெக்ட்.