நட்சத்திர மேடை-இதயம் முரளி

பராசக்தி மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை தயாரித்த ஆகாஷ் பாஸ்கரன் தற்போது அதர்வா நடித்துள்ள இதய முரளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள அந்த படம் குறித்து அவர் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு,

சினிமா பயணம் பற்றியும்,தயாரிப்பாளராக மாறியது பற்றியும் சொல்லுங்க?

எனக்கு ஆரம்பத்திலிருந்தே இயக்குநராக வேண்டும் என்பதுதான் ஆசை. இயக்கத்தில் தான் முதலில் ஆர்வம் இருந்தது. அதன் பிறகுதான் தயாரிப்பு பக்கம் வந்தேன்.

உங்கள் முதல் படத்திலேயே 90களின் காலகட்டத்தை மிகவும் தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக என்ன மாதிரியான ஆய்வுகள் செய்தீர்கள்?

90களின் சூழலை சரியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய ஆராய்ச்சி செய்தோம். அக்காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், இடங்கள் என அனைத்தையும் கவனமாகத் தேர்வு செய்தோம். சில பொருட்களை சமீபத்தில்கூட தேடி எடுத்து வந்து பயன்படுத்தினோம்.

இதயம் முரளி படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் நகர்கிறது?
இது ஒரு அழகான காதல் மற்றும் நட்பு பற்றிய கதை. பள்ளி பருவத்திலிருந்து தொடங்கி, நண்பர்கள், காதல், வாழ்க்கைப் பயணம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது. பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல உணர்வைத் தரும் படம்.

படத்தில் மறைந்த நடிகர் முரளியை நினைவுபடுத்தும் விஷயங்கள் இருக்கிறதா?

நாங்கள் எந்தக் காட்சியையும் நேரடியாக அவரை நினைவுபடுத்தும் வகையில் வைக்கவில்லை. ஆனால் படத்தைப் பார்க்கும்போது சிலருக்கு அந்த உணர்வு இயல்பாக வரலாம். தலைப்பு மற்றும் சில குறிப்புகள் மட்டுமே இருக்கும்.

அதர்வாவை அணுகியபோது அவரது ரியாக்ஷன் எப்படி இருந்தது?

கதையைச் சொன்னவுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஆர்வம் காட்டினார். சரியான நடிகர்கள் தேர்வான பிறகு படத்தைத் தொடங்கலாம் என்று முடிவு செய்தோம்.

இந்தப் படம் உங்கள் முதல் தயாரிப்பா?

உண்மையில் எங்கள் நிறுவனத்தின் முதல் தொடங்கப்பட்ட படம் இதுதான். ஆனால் இடையில் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால் பராசக்தி படம் முதலில் வெளியானது.

கதாநாயகனின் தோற்றத்திற்காக நீங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதா?

ஆமாம். அந்தக் கேரக்டருக்கு ஒரு குறிப்பிட்ட தோற்றம் தேவைப்பட்டது. அதர்வா பராசக்தி பட கெட்ட பில் இருந்ததால் கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது.

கதையின் ஒரு வரி என்ன?

காதலை வெளிப்படுத்துவதில் சிரமப்படும் ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பயணம் தான் இந்தக் கதை.ஆனால் இது வழக்கமான காதல் கதையல்ல. நட்பு, வளர்ச்சி, வாழ்க்கை அனுபவங்கள் என பல விஷயங்களை உள்ளடக்கியது.

தமிழில் ஏற்கனவே நிறைய காதல் கதைகள் வந்துள்ளன. அதில் இந்தப் படம் எப்படி வித்தியாசப்படுகிறது?

கண்டிப்பாக இதற்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. இது வெறும் காதல் கதையாக மட்டுமில்லை. நண்பர்கள், அவர்களின் வாழ்க்கை, அவர்கள் அடையும் மாற்றங்கள் ஆகியவற்றையும் பேசுகிறது. அதுதான் இதன் பலம்.

படத்தில் பயன்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான செட் பற்றி சொல்லுங்கள்?

சில காட்சிகளுக்காக பெரிய செட் அமைத்தோம். அதோடு கிராபிக்ஸ் பயன் படுத்தினோம். குறிப்பாக டீசரில் பார்த்த காட்சிகள் செட் மற்றும் சிஜியில் உருவாக்கப்பட்டவை.

படத்தின் இசையமைப்பாளர் தமன் பற்றிச் சொல்லுங்கள்?

அவருக்கு நடிப்பிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் இசைதான் முக்கியப் பங்கு. அவர் கொடுத்த இசை படத்தின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளது.

கதையில் ஏதாவது எதிர்பாராத திருப்பங்கள் இருக்கிறதா?

கண்டிப்பாக இருக்கிறது. இது சாதாரண காதல் கதை என்ற எண்ணத்துடன் வருபவர்களுக்கு சில ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருப்பதில் எது கடினம்?

இரண்டிலும் சவால்கள் இருக்கின்றன. ஆனால் இயக்குநராக இருப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். எதிர்காலத்திலும் இயக்கத்தில் தான் அதிக கவனம் செலுத்துவேன்.

‘இதய முரளி’ என்ற தலைப்பின் பின்னணி என்ன?

அது வெறும் தலைப்பு மட்டும் அல்ல. அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளோடும் அந்தப் பெயர் தொடர்புடையது. அதனால்தான் அந்த தலைப்பைத் தேர்வு செய்தோம்.

திருச்சி தான் பேக் ட்ராப்!

90களின் திருச்சியை மீண்டும் திரையில் கொண்டு வர முயற்சி செய்துள்ளோம்.மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை அழகாக காட்டியுள்ளோம்.

Comments (0)
Add Comment