110 நாடுகள், 11 ஆயிரம் திரைகளில் ரிலீஸ்

110 நாடுகள், 11 ஆயிரம் திரைகளில் ரிலீஸ்

ஆடித்திருவிழாவை மிஞ்சிய கூலி திருவிழா

முன்பதிவிலேயே 100 கோடியை எட்டிய ஒரே படம்

சென்னை, ஆக, 14: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் இன்று 110 நாடுகளில் 11 ஆயிரம் திரைகளில் இதுவரை இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது. அதோடு ரிலீசுக்கு முன்பே 100 கோடி அளவுக்கு முன்பதிவில் வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
தற்போது ஆடித் திருவிழாக்கள் கலை கட்டி வரும் நிலையில் கூலி படம் இன்று ரிலீஸ் ஆகும் திரையரங்குகளும் திருவிழாக் கோலம் போல் காட்சியளிக்கிறது.

வேட்டையன் படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கூலி. இது அவரின் 171 வது படமாக உருவாகியுள்ளது. இதில் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், சத்யராஜ், சுருதிஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் துவங்கப்பட்ட நாள் முதல், இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியானதும் வெளியானதும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் மேலோங்கியது. அதிலும் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதற்கு பிறகு இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதனை அடுத்து இந்த படம் 110 நாடுகளில் 11 ஆயிரம் திரைகளில் பிரம்மாண்டமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இதனால் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் புக்கிங் தொடங்கியவுடன் பல்வேறு நாடுகளில் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தனர். அதோடு தமிழகத்திலும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்ததால் இங்கும் முன்பதிவில் பல கோடி அளவுக்கு வசூல் ஆனது. இந்த நிலையில் கூலி படம் இன்று (14 ஆம் தேதி) வெளியாகிறது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு இந்த படத்தை 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காலை 9 மணிக்கு முதல் காட்சி அனைத்து இடங்களிலும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியாகிறது. இதனால் பல ரசிகர்கள் அருகிலுள்ள மாநிலங்களுக்க படையெடுத்துள்ளனர். தற்போது பல இடங்களில் ஆடித்திருவிழாக்கள் கலை கட்டி வரும் நிலையில் கூலி படம் இன்று ரிலீஸ் ஆகும் திரையரங்குகளும் திருவிழாக் கோலம் போல் காட்சியளிக்கிறது. ஒரு சிலர் ஆடித்திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

பாக்ஸ்
கூலி படத்துக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?
தமிழில் இதுவரை இல்லாத அளவுக்கு கூலி படத்திற்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என்பது குறித்து திரைத்துறையை சார்ந்தவர்களிடம்
கேட்டதற்கு, ரஜினி படம் என்றாலே வசூல் குவிக்கும், அதிலும் இந்த படம் அவருடைய 50 ஆண்டுகால திரை வாழ்வின் மணி மகுடமாக அவரது பொன்விழா ஆண்டில் வெளியாவதால் ரசிகர்களிடம் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களும் போட்டி போட்டுக் கொண்டு ரிலீசுக்கு முன்பு படத்தை வாங்கி விட்டனர். அதேபோல் திரையரங்கு உரிமையாளர்களும் அதிக காட்சிகளை திரையிட்டு லாபம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் கூலி படத்தை அதிக விலைக்கு வாங்கியுள்ளனர். அவர்கள் நினைத்தது போல் கூலி படத்திற்கான எதிர்பார்ப்பும் இன்று அதிகரித்து முன்பதிவில் 100 கோடி அளவுக்கு வசூலை குவித்துள்ளது. அதோடு இந்திய அளவில் சென்சேஷன் இயக்குனராக இருக்கக்கூடிய லோகேஷ் கனகராஜ், இளம் இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் இதில் இருப்பதால் இந்த படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
எனினும் இந்த படத்தை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது இன்று காலை 8 மணிக்கு பிறகு மெல்ல மெல்ல தெரிய தொடங்கிவிடும். எப்படி இருந்தாலும் முதல் நான்கு நாட்களில் தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்து விடலாம் என்றே தோன்றுகிறது என கூறினர்.

பாக்ஸ்
எஃப் டி எஃப் எஸ்
ரஜினி படம் என்றாலே தியேட்டரில் விசில் பறக்கும், திரை கிழியும். அதனால் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் தற்போதைய இளம் தலைமுறையினர் கூலி படத்தை எவ்வளவு விலை கொடுத்தாவது எஃப் டி எஃப் எஸ் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Comments (0)
Add Comment