‘டாக்டர்’ பட கோமதி அக்கா டு ‘கூலி’பேட் ஃபெல்லோ : கலக்கும் கராத்தே கார்த்தி
காமெடி வில்லனாக கலக்கி வரும் கராத்தே கார்த்தி
தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற “டாக்டர்”படத்தில் கோமதி அக்கா எனும் காமெடி கதாப்பாத்திரத்தில் கவனம் ஈர்த்த கராத்தே கார்த்தி, தற்போது “கூலி”படத்தில் ரஜினியுடன் கலக்கலாக நடித்து, பாராட்டுக்களை குவித்து வருகிறார்.
ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் மிரட்டும் கராத்தே கார்த்தி, மதுரைக்காரர். சின்ன வயதிலிருந்தே சினிமா மீது அவருக்கு உயிர். மத்திய ரிசர்வ் பிரிவு போலீஸில் பணியாற்றியவர், அந்த துறைக்காக கராத்தே, பாக்ஸிங்கில் பல பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார். எஸ்.ஐ ஆக புரமோஷன் ஆக வேண்டிய நேரத்தில்,
2006 ல் வேலையை விட்டுவிட்டு, இனி சினிமாதான் வாழ்க்கை என்று திரைத்துறையில் கால் பதித்தார். கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் துணை நடிகராக அறிமுமானவர், கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையால் வாய்ப்புகளை பெற்று, ‘என்னை அறிந்தால்’, ‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘சித்திரை செவ்வானம்’ பிகில், பேட்ட, ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதிரடி ஆள், முரட்டு தோற்றம் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, டாக்டர் படத்தின் காமெடி பாத்திரம், அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.பேட்ட மற்றும் ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் நடித்திருந்தாலும். கூலி படம் அவருக்கு பெரும் திருப்புமுனையை தந்துள்ளது. ரஜினி உடன் ஃபைட், வசனம், காமெடி என கலக்கியிருக்கும் கராத்தே கார்த்தி நடிப்பு, இப்போது பலரின் கவனத்தை ஈர்த்திருப்பதுடன், மக்களிடம் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
இது குறித்து கராத்தே கார்த்தி கூறுகையில்,
நான் “பேட்ட” படத்திலேயே சூப்பர்ஸ்டாருடன் சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து விட்டேன். இயக்குநர் நெல்சன் “ஜெயிலர்” படத்தில் மறுபடியும் எனக்கு வாய்ப்பு தந்தார். நான் ரஜினி சாரின் தீவிர பக்தன். பெரிய பெரிய நடிகர்களே சூப்பர்ஸ்டாருடன் ஒரு காட்சியிலாவது தோன்றிவிட மாட்டோமா? என ஏங்குகையில், “கூலி” படத்தில் இப்படி எல்லோரும் புகழும் அளவு வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக நினைக்கிறேன். படம் பார்த்த அனைவரும் ரஜினி என்னைப்பார்த்து சொல்லும் பேட் ஃபெல்லோ டயலாக்கை சொல்லி, என்னை வெகுவாக பாராட்டியதை, என்னால் மறக்க முடியாது. எனக்கு வாய்ப்பு தந்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் நல்ல கேரக்டர்களின் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.
இவர் இப்போது தமிழ் சினிமா மட்டும்மல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலிருந்தும் சினிமா வாய்ப்புகள் அவருக்கு குவிய ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் கூமன் மலையாள படத்தில் கராத்தே கார்த்தி நடித்த பிரதான வில்லன் வேடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. தமிழில் சூர்யா நடிக்கும் “கருப்பு” படத்திலும், மற்றும் சூர்யா 46 படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் அவரை பல புது விதமான கேரக்டரில் காணலாம்.
-கே. விஜய் ஆனந்த்