டார்க்- விமர்சனம்

டார்க்- விமர்சனம்
கே.பாக்யராஜ் வீட்டில் தங்கியிருந்த 3 இளைஞர்களில் ஒருவர் மற்ற இருவரைக் கொலை செய்துவிட்டு தானும் தீக்குளித்து உயிரிழக்கிறார். அதன் பிறகு யாரும் குடியேறத் தயங்கும் அந்த வீட்டிற்கு அஜய் கார்த்திக் வந்து தங்குகிறார். அதன் பிறகும் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர, ஒருகட்டத்தில் அஜய் கார்த்திக்கும் கே. பாக்யராஜும் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர். இந்த மர்மத்தை போலீஸ் அதிகாரி நட்டி தலைமையிலான குழு விசாரிக்கிறது. அந்த விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்களே படத்தின் மீதிக்கதை. வழக்கமான பேய் பட பாணியைத் தவிர்த்து, உளவியல் ரீதியான திகிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கே. ஜெகன். அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை கடைசி வரை ரசிகர்களுக்கு தருகிறார். குறிப்பாக பேயை நேரடியாகக் காட்டாமல், கேரக்டர் வழியே உணர வைத்திருப்பது சிறப்பு. அஜய் கார்த்திக், பயமும் குழப்பமும் நிறைந்த கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி தனது வழக்கமான எதார்த்த நடிப்பால் கவர்கிறார். கே. பாக்யராஜ் தனது அனுபவமான நடிப்பால் கதைக்கு பலம் சேர்க்கிறார். அஞ்சனா, நேத்ரன், விடிவி கணேஷ்,இந்துமதி,
சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். ரவி சக்தியின் ஒளிப்பதிவு, மனோ ரமேஷ்சின் பின்னணி இசை படத்தை ரசிக்க வைக்கிறது.

Comments (0)
Add Comment