விஜய், அஜித் இடத்தில் நானா?
சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்
அடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ் கே
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகவுள்ள படம் ‘மதராஸி’.இதில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த், வில்லனாக வித்யூத் ஜம்வால் மற்றும் பிஜுமேனன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ் தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் மதராசி படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: மதராசி படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
பதில்: மதராசி ஒரு பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னர். இதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. நான் இதுவரை நடித்ததில் அதிகம் ஆக்ஷன் உள்ள படம் இது தான். அதோடு காதலும், நகைச்சுவையும் சேர்ந்த ஒரு முழுமையான படம்.
கேள்வி: ஏ.ஆர். முருகதாஸுடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: முருகதாஸ் சார் உடன் வேலை செய்வது மிகவும் ஈசியாகவும் ரசிக்கத்தக் கதாகவும் இருந்தது. இந்த கேரக்டருக்காக அவர் என்னை அதிக தலைமுடி தாடியுடன் கம்பீரமான தோற்றத்துடன் இருக்கச் சொன்னார். அதற்காக உடற்பயிற்சி, உணவு பழக்கம் அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருந்தது.
கேள்வி: இதில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்கள்.
பதில்: இந்த படம் துப்பாக்கியை மையமாகக் கொண்டது. வட இந்திய வில்லனுக்கும் தென் இந்திய ஹீரோவுக்கும் இடையிலான மோதல் கதை இதன் மையக்கரு. இந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
கேள்வி: ருக்மணி வசந்துடன் உங்களின் ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கிறது?
பதில்: ருக்மணி மிகவும் திறமையான நடிகை. அவர் கேரக்டரில் நிறைய உயிரூட்டியிருக்கிறார். எங்களுடைய கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கு. ரசிகர்கள் கண்டிப்பா ரசிப்பார்கள்.
கேள்வி: டாக்டர், அமரன் போன்ற படங்கள் மிகவும் வித்தியாசமானவை. இது உங்கள் திட்டமிட்ட தேர்வா?
பதில்: ஆம். ஒரு ஸ்டீரியோ டைப் ஹீரோவாக இருக்கக் கூடாது என முடிவு செய்தேன். ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் டாக்டர் டார்க் ஹியூமர் படம், அமரன் வாழ்க்கை வரலாறு படம். இப்போது மதராசி ஒரு மாஸ் கமர்ஷியல் படம் என பல்வேறு வகையான படங்களில் நடத்து வருகிறேன்..
கேள்வி: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்குப் பிறகு “அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று உங்களைப் பற்றி கூறுகிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அடுத்தது யார் என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நான் உழைக்கத் தயாராக இருக்கிறேன். அந்த நான்கு பேருக்கும் தனித்துவம் உண்டு. யாரையும் பின்பற்ற வேண்டுமென்று நான் நினைப் பதில்லை. என் ஒரே குறிக்கோள் ரசிகர்களுக்கு நல்ல படங்களை கொடுப்பதே.
கேள்வி: தெலுங்கு ஹிந்தி கன்னட படங்களை போன்று தமிழ் படம் ஏன் ஆயிரம் கோடி வசூல் செய்வதில்லை.
பதில்: அதற்கு முக்கிய காரணம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தியேட்டர் டிக்கெட் விலை குறைவு. அதோடு பாலிவுட் மார்க்கெட்டில் 8 வாரங்களுக்கு படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிடக் கூடாது என கூறி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய மறுக்கின்றனர். இது போன்ற காரணங்களால் வசூல் பாதிக்கப்படுகிறது. நிச்சயம் ஒரு சில ஆண்டுகளில் ஆயிரம் கோடி கனவு நிறைவேறும்.
கேள்வி: “அடுத்த சூப்பர் ஸ்டார்” என அழைக்கப்படுவது குறித்து சொல்லுங்கள்.
பதில்: ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான். ஒரே தளபதி விஜய் அண்ணா தான். ஒரே தல அஜித் சார் தான். எனவே நான் நானாக இருக்கிறேன். எனக்கான ஒரு இடம் தமிழ் சினிமாவில் நிச்சயம் இருக்கும்.
கேள்வி: விஜய் கொடுத்த துப்பாக்கியால், இதில் துப்பாக்கியை பிரதானமாக வைத்து இருக்கிறீர்கள்.
பதில்: கோட் படத்தில் நான் நடிப்பதற்கு முன்பே மதராசி படத்தில் நடிக்க கமிட்டாகி நடித்து வந்தேன். அதில் விஜய் அண்ணா என் கையில் துப்பாக்கி கொடுத்தது இயக்குனர் எழுதிய ஒரு காட்சி படி நடந்தது. இந்தப் படத்தில் துப்பாக்கி முக்கியமாக இருப்பது இயக்குனர் எழுதி வைத்த படி நடக்கிறது .எனவே இவை அனைத்தும் எதார்த்தமாக நடந்தது.
கேள்வி: முருகதாஸின் ஹீரோக்களான விஜயகாந்த், விஜய் வரிசையில் நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா?
பதில்: ரமணா படம் விஜயகாந்த் சாருக்கு அரசியலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. கத்தி படத்தில் விஜய்யை அரசியல் பேச வைத்தார். இதில் அது போல் எதுவும் கிடையாது. அதேபோல் எனக்கும் இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.