*நடிகர் ராஜேஷ் திடீர் மரணம்*

*நடிகர் ராஜேஷ் திடீர் மரணம்*

‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர்,சின்னத்திரை நடிகர் என அனைத்திலும் தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ்.

இவர் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிரார். எல்லாம் தமிழில். முரண் சுவை அதில் ஒன்று. அது முரண்களைப் பற்றியது. ஒரு நாளிதழுக்காக அதைத் தொடராக எழுதினார். மறைந்த தலைவர் இந்திராகாந்தி விஷயத்தில் மக்களின் பாதுகாவலர்களே கொலைகாரர்களாகவும் மாறிய முரண் பற்றி எப்போதும் யோசிப்பாராம். அதை அடுத்து , ஹிட்லர், டால்ஸ்டாய், காமராஜர், செல்லம்மா பாரதி, ஐன்ஸ்டைன் என 52 வாரங்கள் பல்வேறு ஆளுமைகளைப் பற்றி எழுதி உள்ளார். உலக திரைப்படங்கள், அதே போல சிறந்த இயக்குநர்கள், நடிகர்கள், நடிகை ஆட்ரே ஹெப்பர்னைப் பற்றிய புத்தகம் ஒன்று, ஜோதிடம் புரியாத புதிர் உள்ளிட்ட வேறு சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, ‘எங்கு இருந்தாலும் நான் ஒவ்வொரு நாளையும் ரசிக்கிறேன். இப்போ எனக்கு 74 வயசாகிறது. ஆங்கிலத்தில் சொல்லும்போது 74 ஓடுகிறது (running) என்பார்கள். தமிழில் 74 நடக்கிறது என்பார்கள். நான் ஆரோக்கியமான வழியில் நடந்து கொண்டிருக்கிறேன். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வருடங்கள் போனஸ் தான். அதை நான் அமைதியில் கழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று வழக்கம் போல் சொல்லி சிரித்தார்.
இப்படி பன்முகத் திறமை கொண்ட நடிகர் ராஜேஷ் மறைவு திரை உலகில் பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று காலை 8 மணியளவில் நடிகர் ராஜேஷ்க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுமார் 8:15 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 75. அவர் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அவருடைய மகள் அமெரிக்காவில் இருப்பதால் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததும் அவரது உடல் அடக்கம் செய்யப்படும். சென்னை ராமாபுரத்தில் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்போது அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment