சிவாஜி பேரன் என்பது ஒரு விசிட்டிங் கார்டு ; என் திறமையால் ஜெயிக்க நினைக்கிறேன் ! தர்ஷன் கணேசன் அதிரடி பேட்டி
தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான புதுமுக நடிகர்கள் அறிமுகமாக நின்றனர். அதில் சினிமா துறைக்கு சம்பந்தமில்லாத சிலர் வந்து ஜெயிக்கின்றனர். சினிமா வாரிசு நடிகர்கள் சிலர் தடுமாறுகின்றனர். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த தலைமுறை நடிகராக தர்ஷன் கணேசன் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி உள்ளார். சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் இன்று (25ம் தேதி) ரிலீஸ் ஆக உள்ள லெனின் பாண்டியன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருடன் நடத்திய நேர்காணல் வருமாறு,
கேள்வி: முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள்…
பதில்: சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் இரண்டாவது மகன் நான். பள்ளி படிப்பு முடிந்தவுடன் மும்பைக்கு சென்று கல்லூரி மற்றும் நடிப்பு பயிற்சி ஆகியவற்றை படித்தேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக ஏராளமான குறும்படங்கள் விளம்பர படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்து அனுப்பவும் பெற்றுள்ளேன்.
கேள்வி: இந்தப் பட வாய்ப்பு எப்படி வந்தது?
பதில்: படிப்பு முடிந்து சென்னை வந்ததும் ஏராளமான ஆடிஷன்களில் கலந்து கொண்டேன். அப்படித்தான் இந்த படத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் ஹீரோ தேடிய போது எனது புகைப்படத்தை பார்த்து ஆடிஷன் செய்தார். அதன் மூலம் இந்த பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கேள்வி: நடிகர் திலகம் பேரனான உங்களுக்கே வாய்ப்பு கிடைக்கலையா?
பதில்: நடிகர் திலகம் பேரன் என்பது ஒரு விசிட்டிங் கார்டு தான். அதன் மூலம் சினிமா கதவு திறக்கும். ஆனால் திறமை இருந்தால் மட்டும் தான் ஜெயிக்க முடியும். நிலைக்க முடியும். அதனால்தான் ஆட்டிஷன் மூலம் பல வெற்றி தோல்விகளை கடந்து ஹீரோவானேன். என்னை நம்பி, இந்த படத்தில் ஹீரோவாக என்னை அறிமுகப்படுத்திய சத்திய ஜோதி தியாகராஜனுக்கு நன்றி. கதை மற்றும் உங்கள் கேரக்டர் பற்றி சொல்லுங்க… அதிகார மையத்தை எதிர்க்கும் ஒரு விவசாயி மற்றும் ஒரு கான்ஸ்டபிளின் கதை. படத்தில் எனக்கு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரம்.இது ஒரு கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. நான் நகரில் பிறந்து வளர்ந்ததால், எனது நடிப்பையும் திறமையையும் பயிற்சியையும் வெளிப்படுத்த இது ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் இருந்தது. படத்தின் கதை மானாமதுரை கிராமத்தில் நடப்பதால் ஒரே ஊரில் போய் ஒரு மாதம் தங்கி இருந்து அங்கு உள்ளவர்களின் வாழ்க்கையைடும், உணர்வுகளையும், உடல் மொழிகளையும் தெரிந்து கொண்டேன். மக்களைக் கவனித்து அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். நான் ஒரு காவல் நிலையத்திற்குச் சென்று அங்கே சுமார் இரண்டு நாட்கள் உட்கார்ந்து ஒரு போலீசாரின் சராசரி வேலையை தெரிந்து கொண்டது என் கண்களைத் திறக்கும் ஒரு அனுபவமாக இருந்தது.
கேள்வி: சிவாஜி குடும்ப வாரிசு என்பது பலமா? பாரமா?
பதில்: இந்த பாரம்பரிய சினிமா குடும்பத்திலிருந்து வருவது எனக்கு பலம்தான். ஆனால் நான் தனியாக நின்று எனது சொந்த நடிப்பு பயணத்தை உருவாக்க முயற்சிப்பது தான் எனது தாத்தாவுக்கு நான் செய்யும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும். எனது தாத்தா படங்கள் மூலமும், அப்பா ராம்குமார், சித்தப்பா பிரபு மற்றும் அண்ணன்கள் துஷ்யந்த், விக்ரம் பிரபு ஆகியோரிடம் சினிமா கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன். இருப்பினும் நான் வெற்றி அடைய வேண்டும் என்ற இலக்கு கொஞ்சம் பாரம்தான். லெனின் பாண்டியன் பட அனுபவம் பற்றி சொல்லுங்கள்….லெனின் பாண்டியன் எனக்கு மிகவும் முக்கியமான படம். இதில் என்னுடைய நடிப்பை நிரூபிக்க வேண்டும் என்று உழைத்திருக்கிறேன் .அதேபோல் முதல் படத்திலேயே இளையராஜா இசையில் நடித்தது மிகப்பெரிய பாக்கியம். அதேபோல் என்னுடன் கங்கை அமரன், ரோஜா போன்ற லெஜெண்டரி நடிகர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.சிவாஜி கணேசனின் பேரன் என்ற அடையாளம் என்னுடன் எப்போதும் இருக்கும். அதை நான் மறுக்கவும் விரும்பவில்லை. ஆனால் அந்த அடையாளத்திற்குள் மட்டும் நான் இருக்கவும் விரும்பவில்லை. என் தாத்தாவின் பெயரைச் சுமந்து நடப்பதை விட, அவர் பெருமைப்படும் அளவுக்கு என்னுடைய சொந்த அடையாளத்தை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய இலக்கு என்கிறார் தர்ஷன் கணேசன்.
பாக்ஸ்
ரஜினி கமல் வாழ்த்து மறக்க முடியாது..லெனின் பாண்டியன் பட வாய்ப்பு வந்தவுடன் ரஜினி சாரை அப்பாவுடன் சென்று சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்தவுடன் ராம்குமாருக்கு இப்படி ஒரு மகன் இருப்பதே எனக்கு தெரியாது. ரொம்ப நாள் பாம்பேவில் இருந்ததால் வெளியில் பார்க்க முடியவில்லை. பார்க்க ஹேண்சமாக இருக்கிறாய். பொறுப்புடன் திறமையாக நடித்து குடும்ப பெயரை காப்பாற்ற வேண்டுமென கூறினார். அதேபோல் கமல் சாரை சந்தித்ததும் என் அண்ணன் பேரன் ஹீரோவாக வருவது மகிழ்ச்சி. நடிப்பு என்பது உன் ரத்தத்திலேயே இருக்கும். ஆனால் எங்க அண்ணனை போல் நல்ல கேரக்டராக தேர்வு செய்து நடித்து புகழ் பெற வேண்டும் என்றார். இவர்கள் இருவரின் வாழ்த்து என் வாழ்வில் மறக்க முடியாது.