நாட்டின் 15வது குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 14வது குடியரசுத் துணை தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர கடந்த மாதம் திடீரென்று மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் கடந்த ஜூலை 21ம் தேதி இரவு 8 மணிக்கு வழங்கினார். ஜூலை 22ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடியரசுத் துணைத் தலைவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்று உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்த நிலையில் உள்துறை அமைச்சகம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இருந்தது. குடியரசு துணை தலைவர தேர்தெடுப்பதற்கான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியது. நேற்றைய தினம் இதற்கான பணிகள் நிறைவடைந்ததாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு வெளிவந்த நிலையில், இன்று குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 9ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே நாட்டின் 15-வது குடியரசு தலைவர் யார்? என்பதற்கான அதிகாரப்பூர்வ முடிவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 21ம் தேதி என்றும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தினம் ஆகஸ்ட் 25ம் தேதி எனவும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாட்டின் குடியரசு துணைத் தலைவர் உயிரிழந்தாலும் அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோ அதிலிருந்து 2 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன்படி, செப்டம்பர் 9ம் தேதி நாட்டின் 15வது குடியரசு துணை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.