குறிஞ்சிக்கு அம்மாவாக நடித்துள்ள ரம்யா பாண்டியன்
அருள்வான் பட சீக்ரெட்ஸ் சொல்லும் அமரவல்லி……
தமிழ் சினிமாவில் தமிழ் பெண் என்ற அங்கீகாரத்துடன் முன்னணியில் இருக்கும் ஒரு சில நடிகைகளில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமாவுக்கு வர காரணம் இவரது தந்தை துரைப்பாண்டியன். அவரும் திரைப்பட இயக்குனராக இருந்தவர். ‘டம்மி டப்பாசு’ என்ற படம் மூலம் ரம்யா பாண்டியன் அறிமுகமானாலும், ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்தார். பின்னர் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்று மலையாளத்திலும் அடியெடுத்து வைத்தார். இது தவிர விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ முதல் சீசனில் போட்டியாளராகவும், ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். மேலும், ‘பிக் பாஸ் (சீசன் 4) நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வந்து மூன்றாம் இடத்தைப் பிடித்தார். இப்படி சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் லைம் லைட்டில் இருக்கும் போது யோகா ஆசிரியரான லோவல் தவானை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் புகழ்பெற்ற சாருகேசி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார். தற்போது கணேஷ் விநாயகம் இயக்கத்தில் அருள்நிதி கலெக்டராக நடித்துள்ள அருள்வான் படத்தில் ஆரவ்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்த நிலையில் தினமலருக்கு ரம்யா பாண்டியன் அளித்த பேட்டி வருமாறு,
அருள்வான் படத்தில் உங்கள் கேரக்டர் பற்றி சொல்லுங்கள்?
இந்த படத்தில் அமரவல்லி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். கல்வியை தேடி அலையும் குறிஞ்சி என்ற பெண் குழந்தைக்கு தாயாக நடித்துள்ளேன். படம் முழுக்க காடர் மொழி பேசி அந்த மக்களோடு மக்களாக பூண்டு பயிர் வேலை செய்து நடித்துள்ளேன்.
பெண் குழந்தைக்கு தாயாக நடிக்க சம்மதித்தது எப்படி?
குழந்தைக்கு தாயாக நடிப்பது என்பதை விட அதில் எனது கேரக்டர் எப்படி உள்ளது. அதில் நான் எப்படி ஸ்கோர் செய்ய முடியும். இந்தப் படத்திற்கு பிறகு என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் தீர்மானித்து தான் இதில் நடிக்க சம்மதத்தேன். நிச்சயம் இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு என் முடிவு சரி என பலரும் சொல்வார்கள்.
திருமணத்துக்கு பிறகு அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆவது எப்படி உள்ளது?
திருமணத்துக்கு பிறகு போன மாதம் சாருகேசி, இந்த மாதம் அருளாளன் என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி. என் கணவர் ஒரு லக்கி சாமிங் என நினைக்கிறேன்.
திருமண வாழ்க்கை மற்றும் கணவர் பற்றி சொல்லுங்கள்…
மேரேஜ் லைப் நல்லபடியா போய்ட்டு இருக்கு. என் கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்கார். போன படம் ரிலீஸ் வேலைக்காக இங்க வந்தோம். உடனே இந்தப் படத்தோட பிரமோஷன் தொடங்கிடுச்சு. அவரு என்ன இங்க இருக்க சொல்லிவிட்டு பஞ்சாப் கிளம்பி போய்விட்டார். என் கணவரை போல மாமனார் மாமியார் இருவருமே அன்பாகவும் அரவணைப்பாகவும் இருக்காங்க. இந்த படம் ரிலீஸ் அன்னைக்கு குடும்பத்தோட இங்க வந்து படம் பார்க்க போறோம். திருமண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு.
கணவருடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்வதுதான் உங்கள் இளமை ரகசியமா?
இளமையா இருக்குறதுக்கு மனச ரொம்ப சந்தோஷமா வச்சுக்கிட்டாலே போதும். அதோடு யோகாவும் முறைப்படி கத்துகிட்டு செஞ்சா அது இன்னும் பலன் கொடுக்கும். அதுதான் என் முகத்தில தெரியுதுன்னு நினைக்கிறேன். இந்த யோகா ட்ராவல்ல தான் அவரையே நான் சந்தித்தேன்.
பிக் பாஸ் குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்கள் அனுபவம் எப்படி இருந்தது?
வெளியில் எங்கு சென்றாலும் மக்கள் என்னை ஈசியாக அடையாளம் காண்பது இந்த ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தான். அதுதான் என் திரை வாழ்வுக்கும் பெரிய உதவியாக இருந்தது. டெலிவிஷன் நிகழ்ச்சிகளால் மக்களின் அன்பு அதிக அளவில் எனக்கு கிடைத்தது.
அடுத்த படம் கமிட் ஆகி விட்டீர்களா?
முன்னணி இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளேன். விரைவில் அது குறித்த அறிவிப்பு உங்களுக்கு வரும்.
நெல்லை டு பஞ்சாப்
நெல்லையில் பிறந்து வளர்ந்த ரம்யா பாண்டியன் சென்னையில் செட்டில் ஆகி சின்னத்திரை பெரியத்திரை மூலம் பாப்புலராகி, தற்போது பஞ்சாப்பை சேர்ந்த லோவல் தவானை திருமணம் செய்து பஞ்சாபில் செட்டில் ஆகி படங்களில் நடித்து வருகிறார்.