கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தமிழ்நாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளில் 1 கோடியே 64 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு: கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் (ஜூலை 21) தொடங்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட பழமையான கையெழுத்து பிரதிகளான ஓலைச் சுவடிகளின் பாதுகாப்பு பற்றி திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மக்களவையில் நேற்று (04/08/2025) சில கேள்விகளை எழுப்பினார்.

“தமிழ்நாட்டிலிருந்து கிடைத்துள்ள பழமையான கையெழுத்துப் பிரதிகளான ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? அல்லது மேற்கொள்ள முன்மொழிந்திருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

ஏற்கனவே இருந்த தேசிய ஓலைச் சுவடிகள் இயக்கம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஞானபாரதம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து எத்தனை கையெழுத்து ஓலைச் சுவடிகள் கையகப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன?

இன்னமும் பல தனிநபர்களிடம் முக்கியமான ஓலைச் சுவடிகள் இருக்கும் நிலையில் அவற்றை கையகப்படுத்த கொள்கை மற்றும் சட்ட தெளிவு இல்லாததால் இன்னமும் அவை தனி நபர்களிடமே இருக்கின்றன. அவர்களின் தயக்கத்தைப் போக்கி அந்த ஓலைச் சுவடிகளை சேகரிக்க அரசு திட்டம் வைத்திருக்கிறதா?

தேசிய ஓலைச்சுவடி இயக்கத்தின் கீழ் குறிப்பாக தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன?
இந்த இயக்கத்தின் பிராந்திய மையங்கள் அல்லது டிஜிட்டல் மயமாக்கல் மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேக்வாட் அளித்த பதிலில்,

“தமிழ்நாட்டிலிருந்து பழமையான கையெழுத்துப் பிரதிகளான ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவற்றுக்காக ஒன்றிய அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த முயற்சிகளில் ஓலைச் சுவடிகளை அடையாளம் காணுதல், அது தொடர்பான பாதுகாப்பு நுட்பங்களை பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் தமிழ்நாடு உட்பட மாநிலங்கள் முழுவதும் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களுடன் கொள்கை ரீதியான ஒத்துழைப்பை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
முந்தைய தேசிய ஓலைச் சுவடி இயக்கத்தின் (NMM) கீழ் சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள சிபிஆர் இந்திய துணைக்கண்டவியல் ஆய்வு நிறுவனம், சென்னை பல்கலைக் கழகத்திலுள்ள ஓலைச் சுவடிகள் நூலகம், ஆசிய கல்வியியல் நிறுவனம்- காஞ்சிபுரம், சந்திரசேகரேந்திர சரவஸவ்தி மகா வித்யாலயா- காஞ்சிபுரம், சரபோஜி மஹால் நூலகம்-தஞ்சாவூர், தமிழ்நாடு சர்வே டேட்டா ஆகிய நிறுவனங்கள் மூலமாக 2,13,902 ஓலைச் சுவடி கையெழுத்துப் பிரதிகள் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், டிஜிட்டல் மயமாக்கல் பணிகள் கடந்த காலத்தில் நடக்கவில்லை. ஞான பாரதம் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓலைச் சுவடிகளை தங்கள் வசம் வைத்திருக்கும் தனி நபர்களிடம் இருந்து அவற்றை கையகப்படுத்துவதற்காக அவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சிகளிலும் செயல்பாடுகளிலும் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த ஓலைச் சுவடிகளின் மீதான அவர்களது உரிமை உள்ளிட்ட விஷயங்கள் பற்றியும் அரசு அக்கறை கொண்டுள்ளது.
தேசிய ஓலைச் சுவடி இயக்கத்தின் கீழ் ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்துதலுக்கும், பாதுகாத்தலுக்கும் அரசு ஓலைச் சுவடி நூலகம்-சென்னை. அரசு அருங்காட்சியகம், எழும்பூர், சரபோஜி மகால் நூலகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம், சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை ரூ. ஒரு கோடியே 64 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் ஞான பாரதத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன” என ஒன்றிய அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment