நோவா’ பட கதை பேயா? அறிவியலா? :
இயக்குனர் மைலோ சிறப்பு பேட்டி
ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மைலோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “நோவா”. இதில் ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் வெளிவரவுள்ள இந்தப் படத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே? என்,அதைப் பற்றி தெரிந்து கொள்ள இயக்குநர் மைலோவிடம் கேட்டபோது, தமிழ் சினிமாவில் திகில் என்றாலே பேய், பங்களா, பழிவாங்கல் என்ற வழக்கமான பாதையைத் தாண்டி, காலம், மனிதர்களின் நினைவுகள், அறிவியல் மற்றும் பயம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயற்சி செய்திருப்பதாகக் கூறுகிறார்.
பார்வையாளர்களுக்கு பதில்களை உடனடியாக வழங்காமல், படம் முழுவதும் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது“இந்தப் படத்தை ஒரு திகில் திரைப்படமாக மட்டும் பார்க்கக் கூடாது. பயத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் திரைப்படம் இது. பார்வையாளர்கள் படம் முடிந்த பிறகும் சில கேள்விகளுடன் வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்,” என்கிறார்.இந்த படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். பார்வையாளர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால், எதையும் பெரிதாக விளக்கிச் சொல்லவில்லை,அதனால் படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய காட்சிக்கும், வசனத்திற்கும், கதாபாத்திரத் தின் பார்வைக்கும் கூட ஒரு காரணம் இருக்கலாம். படத்தின் உண்மையான மர்மம் என்ன என்பதை வெளிப்படுத்தாமல் இருப்பதையே படக்குழு விரும்புகிறது. ஏனென்றால் இதில் சில உண்மைகள் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுவதற் காக அல்ல… அவர்கள் கண்டுபிடிப்பதற்கா கவே உருவாக்கப்பட்டுள்ளது.நோவா ஒரு குறிப்பிட்ட வகைத் திரைப்படத்திற்குள் மட்டும் அடங்கும் படமல்ல.பேய், பிசாசு, அறிவியல் புனைவு, அமானுஷ்யம், விண்வெளி, வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்கள் என பல வித்தியாசமான உலகங்கள் ஒன்றோடொன்று இணையும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பல வெளிமாநில நடிகர்கள் முக்கியமான சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.இதில் ரைசா வில்சனின் கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். அவரது கதாபாத்திரத்திற்கு ஒரு வசனம் கூட கிடையாது.ஆனால் வசனங்கள் இல்லாமலேயே பார்வை மற்றும் உடல் மொழியின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் இருப்பை உணர்த்தியிருக்கிறது என்றார்.
பாக்ஸ்
சூரியனே இல்லாத ஒரு திரைப்படம்!
நோவாவின் மிகப்பெரிய காட்சியமைப்புச் சவால்களில் ஒன்று, படத்தின் எந்தக் காட்சியிலும் சூரிய ஒளி தெரியக்கூடாது என்பதுதான்.இதற்காகவே படப்பிடிப்பின்போது கருமேகங்கள் சூழும் வரை காத்திருந்து பல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம்.தொடர்ந்து 32 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில், இயற்கைச் சூழலும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.முழுப் படப்பிடிப்பும் கேரளாவில் உள்ள மலைப்பகுதி கிராமம் ஒன்றில் நடத்தினோம். தினமும் அங்கு செல்வதே ஒரு சவாலாக இருந்ததாக தெரிவிக்கிறார்.