தூத்துக்குடியில் இப்படி ஒரு திரையரங்கம்
50 ஆண்டுகளாக ரஜினியுடன் பயணிக்கும் ஸ்ரீ பால கிருஷ்ணா தியேட்டர்
அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை ரிலீஸ்
சென்னை ஆக.12:
ரஜினிகாந்தின் முதல் படமான அபூர்வ ராகங்கள் தொடங்கி, இன்று கூலி வரை அவரின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தில் அனைத்து படங்களையும் வெளியிட்ட பெருமை தூத்துக்குடி ஸ்ரீ பாலகிருஷ்ணா திரையரங்கத்தையே சேரும்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் திரையரங்கம் நடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். அதிலும் வீட்டில் இருந்தபடியே படம் பார்க்கும் வசதிகள் வந்த பிறகு, டிவி சேனல்கள், ஓடிடி தளங்களோடு போட்டி போட்டு தியேட்டர் தொழிலை விடாமல் நடத்துவது என்பது ஒரு பெரிய சவால் தான். அந்த சவாலை எதிர்கொண்டு இன்றும் வெற்றி நடை போடும் ஒரு சில திரையரங்குகளில் குறிப்பிடும்படியாக இருப்பது தூத்துக்குடி ஸ்ரீ பாலகிருஷ்ணா சினிமாஸ் ஆகும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் ஹீரோவாக நடித்த அபூர்வ ராகங்கள்(1975) படம் தொடங்கி இன்று கூலி (2025) படம் வரை 50 ஆண்டுகள் ரஜினி படங்களை வெளியிட்டு அவருடன் பயணித்த பெருமை இவர்களுக்கு உண்டு.
தமிழ் சினிமாவில் இயக்குனர் கே பாலச்சந்தரால் அடையாளம் காட்டப்பட்டு அவரின் இயக்கத்தில் 1975, ஆகஸ்ட் 15 ஆம் தேதி அபூர்வ ராகங்கள் படம் வெளியானது. கூலி திரைப்படம் வருகிற ஆக.14 ஆம் தேதி வெளியாகிறது.இந்த 50 ஆண்டுகளில் கே. பாலச்சந்தரிலிருந்து லோகேஷ் கனகராஜ் வரை பல இயக்குநர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த் 171 திரைப்படங்கள் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தில் பயணிக்கிறார். இப்போதும் இவர்தான் இந்திய சினிமாவின் வசூல் மன்னனாக நீடிக்கிறார்.இந்த நிலையில், முதல் படமான அபூர்வ ராகத்தை வெளியிட்ட திரையரங்கம் ஒன்று கூலி திரைப்படத்தையும் வெளியிடுகிறது என்றால் எவ்வளவு அருமையான விஷயம். துத்துக்குடி ஶ்ரீபாலகிருஷ்ணா சினிமாஸ் திரையரங்கம் தான் இந்த ஆச்சரியத்தை நிகழ்த்தியிருக்கிறது.அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரையிலான இடைப்பட்ட 50 ஆண்டுகால பயணத்தில் ரஜினியுடன் இணைந்து வந்த ஒரே திரையரங்கம் இதுதான். இந்த தகவல் கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த திரையரங்கத்தை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். கூலி படம் வெளியாகும் வரும் 15ஆம் தேதி தியேட்டர் முன்பு கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்துள்ளனர்.