சீதையாக நடித்தது என் பிறவிப்பயன்:மனம் திறந்த சாய் பல்லவி

சீதையாக நடித்தது என் பிறவிப்பயன்:மனம் திறந்த சாய் பல்லவி

தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருப்பவர் சாய் பல்லவி. கிளாமர் கேரக்டர்களில் நடிக்காமல், தனது கதாபாத்திரங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். தற்போது ராமாயணா படத்தில் சீதையாக நடித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் படம் ‘ராமாயணா: பாகம் 1’.இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாக வும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்தது குறித்து சாய் பல்லவி கூறியது: “நடிகர்கள் நினைத்த மாத்திரத்தில் தேவதைகளாக வோ அல்லது கடவுள்களாகவோ நடித்துவிட முடியாது. இப்படி ஒரு தெய்வீகக் கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது என் பிறவிப்பயன், இதைப் பற்றி ஒரு கலைஞரால் சாதாரணமாகக் கற்பனை கூடச் செய்ய முடியாது. உலகிற்கு மிகச்சிறந்த ஒரு படைப்பை வழங்க வேண்டும் என்பதற்காகத் தங்களின் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுத்து உழைக்கும் ஒரு குழு அமைவது வரம். ஏனெனில், இந்தத் திரைப்படம் எதிர்காலத் தலைமுறையினர் திரும்பிப் பார்க்கும் ஒரு வரலாறாக மாறப்போகிறது. அப்படிப்பட்ட உன்னதமான படத்தில் என்னைச் சேர்த்ததற்காகத் தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா மற்றும் இயக்குனர் நிதேஷ் திவாரிக்கு என் நன்றிகள்.சீதா தேவியாக நடிக்கும் வாய்ப்பை நான் தேடிப் போகவில்லை, அது எனக்குக் கிடைத்த ஆசிர்வாதம் என்றே கருதுகிறேன். ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு இப்படித்தான் நடிப்பேன் என்று கூறக்கூடிய பாத்திரம் அதுவல்ல. படப்பிடிப்பின் போது நான் அமைதியாக தியானத்தில் அமர்ந்து, ‘சீதா அம்மா, இந்த படத்துக்கு என்ன தேவையோ அதை என் வழியே கொண்டு வாருங்கள்’ என்று வேண்டிக் கொள்வேன். எனது எண்ணங்களை எப்போதுமே தூய்மையாகவும், நடுநிலையாகவும் வைத்திருக்க முயன்றேன். அந்த முயற்சியில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். படகுழுவினர் கடந்த
10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்துக்காக உழைத்து வருகிறார்கள். இந்த வரலாற்றுப் பயணத்தில் இணைந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்”‘டங்கல்’ மற்றும் ‘சிச்சோரே’ போன்ற படங்களை இயக்கிய நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம், உலகத்தரம் வாய்ந்த சிஜி தொழில்நுட்பத் துடன் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இரு இசையமைப்பாளர்கள் இப்படத்துக்காக கூட்டணி அமைத்துள்ளனர். மேலும், ராவணனாக நடிகர் யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூலை 24 அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment