டோரதி-விமர்சனம்
சிறு வயது முதலே ரிஷிகாந்தும், சனந்தும் நெருங்கிய நண்பர்கள். சாதி வெறி பிடித்த சனந்தின் தந்தை முத்துகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்களையே ஆணவக் கொலை செய்து விடுகிறார். இந்நிலையில் அவரின் 2வது மகனான சவுந்தரராஜா, கீர்த்தி சுரேசை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். கீர்த்தி சுரேசிடம் மிக நெருக்கமாக சனந்த் பழகி, தன்னை பற்றி முழுமையாக அவரிடம் சொல்கிறார். அடுத்த ஒரு சில நாட்களிலேயே கீர்த்தி சுரேஷ் தூக்கில் தொங்குகிறார். இந்த நிலையில் சனந்த் பற்றிய உண்மை அவரது அப்பா முத்துக்குமாருக்கு தெரிய வர,ரிஷிகாந்தை அழைத்து சனந்தை கொலை செய்ய சொல்கிறார்.அதை தொடர்ந்து நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதி கதை. ஆணாதிக்கம், சாதிவெறி, பாலின பாகுபாடு என சமூகத்துக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் ஒரே படத்தில் காக்டெயில் போல் கலந்து தனது திரை மொழியில் இது கார்த்திக் சுப்புராஜ் படம் என கொடுத்துள்ளார். கதையிலும், கதாபாத்திர தேர்விலும் அவரின் நேர்த்தி தெரிகிறது. நிச்சயம் இந்த டோரதி படம் உலக அரங்கில் ஒரு ஆவண படமாக மாறும். மதுர பசங்களாக ரக்டான கேரக்டரில் ரிஷிகாந்த், சனந்த் இருவரும் அசத்தல் நடிப்பை தந்துள்ளனர். அதிலும் திருநங்கையாக அற்புதமான நடிப்பை சனந்த் வெளிப்படுத்தி யுள்ளார். சில காட்சிகளே வந்தாலும் கீர்த்தி சுரேஷ் கதைக்கு தாக்கத்தை கொடுத்துள்ளார். சவுந்தரராஜா கேரக்டர் படத்திற்கு பலம். முத்துக்குமார், ஜீவா சுப்பிரமணியன், கஜராஜன், ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோர் நடிப்பு கவனிக்க வைக்கிறது. கிராமத்து அழகை ஒளிப்பதிவாளர் திரு அழகாக படம் பிடித்துள்ளார். இளையராஜா இசையில் முத்துமணி, கல்யாண விருந்து பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.