ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய ஆடித்திருவிழாவில் அணிவகுத்த தெய்வங்கள்
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பு வாய்ந்த மாதமாகும்.ஆடி மாதம் ஒவ்வொரு வாரமும் பக்தர்கள் அம்மனுக்கு கூழ்வார்த்து, பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.
குறிப்பாக ஆடி மாதம் ஐந்தாவது வாரம் சிறப்பான வாரமாகும். இதை ஒட்டி சென்னை தி. நகர் கிரியப்பா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தின் 57 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேனாம்பேட்டை ஆலையம்மன் ஆலயத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அழகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்திற்கு வந்தனர். அப்போது அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம், பேண்ட் வாத்தியம், அம்மன் முருகன் காளி மற்றும் கருப்பன் வேடமிட்டு ஊர்வலத்துக்கு முன்பாக சென்றனர். அதோடு வான வேடிக்கைகளும் நடந்தது. முடிவில் கோவிலை வந்தடைந்த உடன் அங்கு அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை, ஆலய தலைவர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர், அதிமுக மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் பி ஆறுமுகம் என்கிற சின்னையன்,லதா சின்னையன் ஏற்பாட்டில் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் எஸ் என் ஜெயமுருகன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஸ்டெர்லிங் ஜார்ஜ்,
முன்னாள் கவுன்சிலர் யூ. கற்பகம் மற்றும் எல்.சங்கர்,இந்தியன் பாஸ்கர், மார்க்கெட் சங்கர் சுரேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாளை ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமை மதியம் அம்மனுக்கு கூழ்வார்த்தல் வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது.